விமான கண்காட்சி எதிரொலி; பயணியர் விமானங்களுக்கு தடை
விமான கண்காட்சி எதிரொலி; பயணியர் விமானங்களுக்கு தடை
ADDED : பிப் 03, 2025 04:59 AM
பெங்களூரு; இந்திய விமான கண்காட்சியை ஒட்டி, வரும் 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் விமானங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தடை விதிக்கப்படுகிறது.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமான நிலைய பயிற்சி மையத்தில், வரும் 10 முதல் 14ம் தேதி வரை இந்திய விமான கண்காட்சி நடக்கிறது.
இதையடுத்து, எலஹங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடும். இதன் காரணமாக, பயிற்சி நிலையத்தை சுற்றி 13 கி.மீ., சுற்றளவில் உள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள், ரெஸ்டாரென்ட்கள் மூடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய விமான கண்காட்சி நடப்பதால், இம்மாதம் 5 முதல் 14ம் தேதி வரை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்படும், தரையிறங்கும் விமானங்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பிப்., 5, 6, 8 ம் தேதிகளில் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும்; பிப்., 7, 9 ம் தேதிகளில் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; பிப்., 7 ம் தேதி மதியம் 3:00 முதல் மாலை 4:30 மணி வரையிலும் விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுளளது.
பிப்., 10ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரையிலும்; மதியம் 2:30 முதல் 3:30 மணி வரையிலும்; பிப்., 11, 12ம் தேதிகளில் மதியம் 12:00 முதல் 2:30 மணி வரையிலும்.
பிப்., 13, 14ம் தேதிகளில் காலை 9:30 முதல் மதியம் 12:00 மணி வரையிலும், 2:30 முதல் மாலை 5:00 மணி வரையிலும்; கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.