'ஆப் ரோடு' பைக் பந்தயம் அசத்தும் பெங்களூரின் ஐஸ்வர்யா
'ஆப் ரோடு' பைக் பந்தயம் அசத்தும் பெங்களூரின் ஐஸ்வர்யா
ADDED : ஜன 24, 2025 07:04 AM

இன்றைய இளம் தலைமுறையினருக்கு பைக்கில் நீண்ட துாரம் லாங் டிரைவ் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு. வாலிபர்களுக்கு நிகராக இளம்பெண்களும் மோட்டார் சைக்கிள்களில் நீண்ட துாரம் பயணம் செய்து அசத்துகின்றனர். மொபட் ஓட்டவே ஒரு காலத்தில் பெண்கள் பயப்பட்ட நிலையில், தற்போது அதிநவீன ரேஸ் பைக்குகளை கூட பெண்கள் சர்வசாதாரணமாக ஓட்டுகின்றனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.
பெங்களூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா பிஸ்சே, 29. ஆப் ரோடு மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை ஆவார்.
இவருக்கு சிறிய வயதில் இருந்தே பைக்குகள் மீது அலாதி பிரியம். தந்தை எங்கேயாவது பைக்கில் புறப்பட்டால் அவருடன் சென்று விடுவார். பைக்கை எப்படி ஓட்டுவது, எந்த நேரத்தில் கியர் மாற்றுவது என்று அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்வாராம்.
இவருக்கு, 14 வயது இருக்கும் போது வீட்டின் அருகே ஸ்கூட்டர் ஓட்டி பயின்றார். 15 வயதில் கியர் பைக்குகளும் ஓட்ட ஆரம்பித்தார். எப்போது 18 வயது ஆகும் என்று காத்து இருந்தார். 18 வயது ஆனதும் ஓட்டுநர் உரிமம் பெற்று விட்டார்.
முதலில் பெங்களூரை சுற்றியுள்ள நகரங்களில் பைக்கில் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தார். பின், அவருக்கு ஆப் ரோடு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை வந்தது.
'ஆப் ரோடு' பந்தயம் என்பது, கரடு முரடான பாதைகளில் பைக் ஓட்டுவது. இதற்காக, 'அபெக்ஸ் ரேசிங் அகாடமி'யில் பயிற்சிக்கு சேர்ந்தார். அங்கு கொடுத்த பயிற்சியில் நன்றாக கைதேர்ந்தார்.
கடந்த 2016ல் இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார். பின், கலிபோர்னியா சூப்பர் பைக் பள்ளியிலும் பயிற்சி எடுத்தார்.
கடந்த 2017ல் தொழில் முறை ஆப் ரோடு மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். அதில் தொடர்ச்சியாக ஏழு பட்டம் வென்று அசத்தினார். அதே ஆண்டு டி.வி.எஸ்., ஒன் மேக் ரோட் ரேசிங் பட்டமும் வென்றார்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்புகளின் கூட்டமைப்பின் சிறந்த பெண்மணி விருதும் பெற்றார்.
தற்போது வரை அவரது சாதனை பயணம் தொடர்கிறது. கரடு முரடான சாலைகளில் மோட்டார் சைக்கிளை ஓட்டி பட்டையை கிளப்பும் ஐஸ்வர்யா, வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு உத்வேகமாக விளங்குகிறார்
. - நமது நிருபர் -

