கடிகார சின்னம் அஜித் பவாருக்கே...அனுமதி! கோர்ட் உத்தரவால் சரத் பவார் ஏமாற்றம்
கடிகார சின்னம் அஜித் பவாருக்கே...அனுமதி! கோர்ட் உத்தரவால் சரத் பவார் ஏமாற்றம்
ADDED : அக் 25, 2024 02:25 AM

புதுடில்லி மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், கடிகார சின்னத்தை பயன்படுத்த அஜித் பவார் அணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக் கிறது.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்.,கின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை அங்கீகரித்த தேர்தல் கமிஷன், கடிகார சின்னத்தை அஜித் பவாருக்கு வழங்கியது.
சரத் பவார் கட்சிக்கு தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு என்ற பெயரையும், இசைக்கருவி ஊதும் மனித உருவ சின்னமும் வழங்கப்பட்டது.
தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை எதிர்த்து, சரத் பவார் அணியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடிகார சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தும்படி அஜித் பவார் அணிக்கு ஏப்., 4ல் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சரத் பவார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''அஜித் பவார் அணியினர் தங்கள் பிரசார விளம்பரங்களில், கடிகார சின்னம் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்பதை தெளிவுபடுத்த தவறியதால், அவர்கள் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது,'' என வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
'சட்டசபை தேர்தல் முடியும்வரை நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறமாட்டோம்' என்ற புதிய உறுதிமொழியை அஜித் பவார் அணியினர் தாக்கல் செய்ய வேண்டும். தர்மசங்கடமான சூழலை உருவாக்க வேண்டாம். எங்கள் உத்தரவை மீறுவது கண்டறியப்பட்டால், தானாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கையை துவக்குவோம். நீதிமன்ற உத்தரவை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும்.
சட்டசபை தேர்தல் விளம்பரங்களில், கடிகார சின்னம் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்ற முன் அறிவிப்புடன் அஜித் பவார் அணியினர் கடிகார சின்னத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கடிகார சின்னம் முடக்கப்படும் அல்லது தங்களுக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த சரத் பவார் தரப்பு, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஏமாற்றம் அடைந்துஉள்ளது.