அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய ராணுவம்
அக்னிவீர் சர்ச்சை: ராகுல் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய ராணுவம்
ADDED : ஜூலை 04, 2024 11:10 AM

புதுடில்லி: அக்னிவீர் திட்டத்தில் உயிர்தியாகம் செய்த குடும்பத்திற்கு எந்த நிதியுதவி செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த பஞ்சாபைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் கடந்த ஜன.,18 ல் நடந்த கன்னிவெடி வெடிப்பில் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளதாவது: உண்மையை பாதுகாப்பதே நமது அடிப்படை. ஆனால், வீரமரணம் அடைந்த அக்னிவீரர் அஜய்குமார் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட உதவி குறித்து பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறினார். அக்னிவீர் அஜய்குமார் சிங்கின் தந்தையே அவர்களின் பொய்கள் குறித்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். எனவே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பணியில் இருந்த போது உயிர்நீத்த அக்னீவீரர் அஜய்குமாரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அஜய்குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் தலைவணங்குகிறது. அவரது இறுதிச்சடங்கு முழு ராணுவ மரியாதையுடன் நடந்தது. அவரது குடும்பத்திற்கு மொத்த தொகையில் ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. அக்னிவீர் திட்டத்தின்படி, மற்ற பணபலன்களான ரூ.67 லட்சம் போலீசார் சரிபார்ப்புக்கு பிறகு விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் மொத்த தொகை ரூ.1.65 கோடி ஆக இருக்கும். வீரமரணம் அடைந்த வீரரின் பணபலன்கள், அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.