காலாவதி உணவுப்பொருட்கள் விமானத்தில் வினியோகம்; கொந்தளித்த பயணியிடம் மன்னிப்பு கேட்டது ஆகாசா!
காலாவதி உணவுப்பொருட்கள் விமானத்தில் வினியோகம்; கொந்தளித்த பயணியிடம் மன்னிப்பு கேட்டது ஆகாசா!
ADDED : செப் 09, 2024 07:53 AM

புதுடில்லி: காலாவதியான உணவுப் பொருட்களை தருவதாக, ஆகாசா விமான பயணி புகார் அளித்தார். மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்துள்ளது.
கோவிட் காலத்திற்கு பிறகு, விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாதம் தோறும் பயணம் செய்யும் பணிகளின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டு வருகிறது. அதேநேரத்தில், பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.
கோரக்பூரிலிருந்து, பெங்களூருக்கு சென்ற QP 1883 என்ற ஆகாசா விமானத்தில், பயணிகளுக்கு காலாவதியான உணவுப் பொட்டலங்கள் விமான நிறுவனம் வழங்கியதாக பயணி ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மன்னித்து விடுங்கள்!
தவறை ஒப்புக்கொண்ட விமான நிறுவனம் சமூகவலைதளத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆகாசா ஏர் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: தரத்தை பூர்த்தி செய்யாத வகையில் கவனக்குறைவாக தரமற்ற சிற்றுண்டி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஒரு சில பயணிகளுக்கு காலாவதியான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயணிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.