மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே சம்பல் ஆய்வு; மத்திய அரசு மீது அகிலேஷ் குற்றச்சாட்டு
மக்கள் பிரச்னைகளை திசை திருப்பவே சம்பல் ஆய்வு; மத்திய அரசு மீது அகிலேஷ் குற்றச்சாட்டு
ADDED : டிச 22, 2024 09:24 PM

லக்னோ: வேலைவாய்ப்பின்மை,விவசாயிகள் போராட்டம் ஆகிய பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே சம்பல் விவகாரத்தை பா.ஜ., அரசு கையாள்வதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதி, இந்து கோவிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் வன்முறையாக மாற, பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே ஆய்வும் நடத்தப்பட்டது.
அதே சம்பல் பகுதியில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஸ்ம சங்கர் கோவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் கல்கி விஷ்ணு கோவிலில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதே மாவட்டத்தில் சண்டாசி பகுதியில் பழமையான படி கிணறு இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந் நிலையில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து திசை திருப்பவே சம்பல் விவகாரத்தை பா.ஜ., அரசு கையாள்வதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
ஆய்வுக்காக தோண்டுவது என்பது எந்த தீர்வையும் நமக்கு தராது. மத வழிபாட்டு சட்டம் நம் நாட்டில் உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை அந்த சட்டம் அனுமதிக்காது.
10 ஆண்டுகளாக மத்தியிலும், 7 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்திலும் பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. வேலைவாய்ப்பின்மை என்பது வரலாறு காணாத அளவு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.