அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேசத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
UPDATED : நவ 08, 2025 09:33 AM
ADDED : நவ 08, 2025 08:21 AM

லக்னோ: இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அல்கொய்தா பயங்கரவாதியை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு படையினர் வெளியிட்ட அறிக்கையில்; அல்கொய்தா பயங்கரவாதியான பிலால் கான் ஷஹரன்பூரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டான். இவருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 4000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செல்போன் எண்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படுபவர்களிடம் இருந்து வரும் உத்தரவுகளைப் பெற்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான். அல் கொய்தா இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் பிறந்த ஆசிம் உமர் என்பவனால், பிலால் கான் பயங்கரவாத செயல்களில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளான். ஆசிம் உமர், அல் கொய்தா தலைவர்களான ஒசாமா பின் லேடன் மற்றும் அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோரால் நியமிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிம் உமரின் கருத்துக்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு பிலால் கான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளான். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் தங்களின் ஆதரவாளர்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளான். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை பரப்ப முயற்சித்து வந்துள்ளான்.
மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்து பிலால் கான், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளான். பாகிஸ்தானை ஆதரிக்கும் வீடியோக்களைப் பகிர்ந்ததோடு, காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளான், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

