ADDED : மே 14, 2025 09:00 PM
புதுடில்லி:பஞ்சாபில், 23 பேர் பலியாக காரணமான கள்ளச்சாராயத்தில் பயன்படுத்தப்பட்ட மெத்தனால் சப்ளை செய்த, டில்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நேற்று முன் தினம் கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
அமிர்தசரஸ் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுடில்லி மாடல் டவுனைச் சேர்ந்த சாஹிப் சிங், ரிஷப் ஜெயின் ஆகிய இருவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரசாயனம் மொத்த வியாபாரிகளான இருவரும், பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச் சாராயம் தயரித்தோருக்கு மெத்தனால் சப்ளை செய்துள்ளனர்.
பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் கலால் சட்டத்தின் கீழ், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக மெத்தனால் வாங்குவோர் குறித்து இருவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது.