சூரத் - பாங்காக் விமானத்தில் மதுபானங்கள் விற்பனை 'ஜோர்'
சூரத் - பாங்காக் விமானத்தில் மதுபானங்கள் விற்பனை 'ஜோர்'
ADDED : டிச 24, 2024 03:29 AM
மும்பை : 'ஏர் இந்தியா' நிறுவனம் புதிதாக துவக்கியுள்ள சூரத் - பாங்காக் விமானத்தில், மதுபான விற்பனை அமோகமாக நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், குஜராத்தின் சூரத் நகரில் இருந்து ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புதிய விமான சேவையை நேற்று முன்தினம் துவக்கியது.
பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் ஆட்சி நடக்கும் குஜராத்தில், பூரண மதுவிலக்கு உள்ளது.
இந்நிலையில் இந்த புதிய விமானத்தில், மொத்தமுள்ள 176 இடங்களில், 175 பேர் பயணம் செய்தனர்.
சூரத்தில் இருந்து விமானம் புறப்பட்ட உடனேயே, பெரும்பாலான பயணியர், மதுபானங்களை வாங்கத் துவங்கினர். விற்பனை அமோகமாக நடந்ததாக கூறப்படுகிறது.
மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக, சமூக வலைதளத்தில் பலர் பதிவிட்டனர். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் இதை மறுத்துள்ளது.
விமானங்களில், பயணி ஒருவருக்கு அதிகபட்சம், 100 மி.லி., மது மட்டுமே வழங்கப்படும். இந்த விமானத்தில், ஐந்து வகையான மதுபானங்கள் விற்கப்பட்டன.
இதில், வரலாறு காணாத அளவுக்கு விற்பனை நடந்ததாக, பயணியர் சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
ஆனால், எவ்வளவு விற்பனையானது என்பது குறித்து ஏர் இந்தியா எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.