இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது; அமெரிக்காவை எச்சரிக்கிறார் காங் எம்பி சசி தரூர்!
இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது; அமெரிக்காவை எச்சரிக்கிறார் காங் எம்பி சசி தரூர்!
ADDED : செப் 04, 2025 06:20 PM

வாஷிங்டன்: 'இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது' என அமெரிக்காவை காங்கிரஸ் எம்பி சசிதரூர் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு சசிதருர் அளித்த பேட்டி: அமெரிக்கா இந்தியாவுடனான தனது வரிப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு நாடுகளுக்கும் உலகிற்கும் இது மிகவும் அவசியமானது. இந்தியாவை அந்நியப்படுத்துவது ஆபத்தானது.பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும். சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்க எதிரிகளுடன் இந்தியா நெருங்கிய உறவை ஏற்படுத்த வழி வகுக்கும். இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா நடத்தவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டை பலவீனப்படுத்தும்.
ஏற்க முடியாது
இந்தியா வெறும் வர்த்தக கூட்டாளி மட்டுமல்ல. இந்தோ-பசிபிக் பகுதியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துங்கள். எந்தவொரு நாடும் அதன் தேசிய நலன்களின் அடிப்படையில் மட்டுமே செய்யக்கூடிய எரிசக்தி தேர்வுகள் அல்லது பாதுகாப்பு கொள்முதல் முடிவுகளுக்காக இந்தியாவைத் தண்டிப்பது எதிர்மறையானது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. வரிகளை அமெரிக்கா முதலில் நீக்க வேண்டும்.
தனிப்பட்ட அழைப்பு
டிரம்பிடமிருந்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது அவர்களின் விரிசல் அடைந்த உறவுக்கு மீண்டும் அரவணைப்பை அளிக்க உதவும். அதிக வரிவிதிப்புக்கள் முற்றிலும் நியாயமற்றது. 50 சதவீத வரிகள் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சசிதரூர் கூறியுள்ளார்.