அனைவரும் மோடி குடும்பத்தினர் பிரசாரத்தை துவக்கிய பா.ஜ., தலைவர்கள்
அனைவரும் மோடி குடும்பத்தினர் பிரசாரத்தை துவக்கிய பா.ஜ., தலைவர்கள்
ADDED : மார் 05, 2024 01:02 AM

புதுடில்லி, 'பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறிய நிலையில், 'மோடி கா பரிவார்' எனப்படும், 'அனைவரும் மோடியின் குடும்பம்' என்ற பிரசாரத்தை பிரதமர் மோடியும், பா.ஜ., மூத்த தலைவர்களும் துவங்கி உள்ளனர்.
ஏப்., - மே மாதங்களில், 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேதி விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணியை வீழ்த்த, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
பீஹாரின் பாட்னாவில், நேற்று முன்தினம் நடந்த, இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 'பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை' என, பேசினார். ஹிந்து மத சம்பிரதாயங்களை பிரதமர் பின்பற்றவில்லை என்றும் லாலு கூறினார்.
இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் பேசியதற்கு பதிலடியாக, லாலு இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர், தங்களது சமூக வலைதள கணக்குகளின் பெயர்களில், 'மோடி கா பரிவார்' என சேர்த்துள்ளனர்.
அதாவது, 'நாங்கள் அனைவரும் மோடியின் குடும்பம்' எனக் கூறி எதிர்க்கட்சியினரை மூக்குடைப்பு செய்துள்ளனர். இது தொடர்பான பிரசாரத்தையும் துவக்கி உள்ளனர்.
இதற்கிடையே தெலுங்கானாவின் அடிலாபாதில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
எனக்கு குடும்பம் இல்லை என, எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், இந்நாட்டின், 140 கோடி மக்களும் என் குடும்பத்தினர். என் தேசமே என் குடும்பம்.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நாட்டு மக்களுக்காக வாழ்வேன் என்ற கனவோடு தான், சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். அதன்படி தற்போது, நாட்டு மக்களின் நலனுக்காகவே அயராது உழைத்து வருகிறேன். வாரிசு கட்சிகளின் முகங்கள் வித்தியாசமாக இருக்கலாம்.
ஆனால் அவற்றின் ஒரே நோக்கம், பொய் சொல்வதும், கொள்ளை அடிப்பதும் தான்.
காலேஸ்வரம் லிப்ட் பாசனத் திட்டம் போன்ற ஊழல்களை, பாரத் ராஷ்டிர சமிதி செய்துள்ளது. இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், நாற்காலியில் அமர்ந்தபடி, காங்., அரசு வேடிக்கை பார்க்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

