எல்லாம் ராகுல், சரத்பவாரின் கட்டுக்கதைகள்; பாஜ பதிலடி
எல்லாம் ராகுல், சரத்பவாரின் கட்டுக்கதைகள்; பாஜ பதிலடி
ADDED : ஆக 10, 2025 09:26 PM

நாக்பூர்: மஹாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியிருப்பது கட்டுக்கதைகள் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்படியிருக்கையில், கடந்த 2024 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது, மொத்தம் உள்ள 288 இடங்களில் 160 இடங்களில் உறுதியாக வெற்றி பெற்றுத் தருகிறோம் என்று சிலர் தன்னை அணுகி பேரம் பேசியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அந்த நபர்களை ராகுலுடன் சந்திக்க வைத்தாகவும், ஆனால், ராகுல் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் சரத் பவார் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதுபோன்று மோசடியாளர்கள் குறித்து போலீஸில் புகார் அளிக்காமல், அவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியது ஏன்? என்று சரத் பவாருக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் எண்ணத்துடன் அந்த நபர்கள், மிகப்பெரிய தலைவர்களை அணுகியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவர்கள் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் போலீஸிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ புகார் செய்யவில்லை. இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியென்றால், அவர்கள் இந்த முறைகளை பயன்படுத்த முயற்சித்துள்ளனர். இது ராகுல் மற்றும் சரத்பவாரின் கட்டுக்கதைகள், என்றார்.