ஹரியானாவில் அனைத்து தகவல் தொடர்புகளும் ஹிந்தியில் தான் இருக்கும் * மாநில கல்வி அமைச்சர் பேச்சுக்கு காங்., கண்டனம்
ஹரியானாவில் அனைத்து தகவல் தொடர்புகளும் ஹிந்தியில் தான் இருக்கும் * மாநில கல்வி அமைச்சர் பேச்சுக்கு காங்., கண்டனம்
ADDED : ஜூன் 13, 2025 08:32 PM
சண்டிகர்:''ஹரியானா மாநில கல்வித்துறையின் அனைத்து தகவல் தொடர்புகளும், ஹிந்தி மொழியில் தான் இருக்கும். 5 சதவீதம் மக்கள் எதிர்க்கின்றனர் என்பதற்காக, 95 சதவீத மக்களுக்கு தெரிந்த மொழியை தவிர்க்க முடியாது,'' என, ஹரியானா மாநில கல்வி அமைச்சர் மஹிபால் தண்டா கூறினார். இதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குருஷேத்ரா நகரில், ஹரியானா கல்வி அமைச்சர் மஹிபால் தண்டா நிருபர்களிடம் கூறியதாவது:
ஹரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சராக என் தலைமையின் கீழான அனைத்து துறைகளும், ஹிந்தி மொழியைத் தான் பயன்படுத்தும். ஏனெனில், ஹிந்தி மொழி தான் தேசிய மொழி என்ற அந்தஸ்தில் உள்ளது. ஹிந்தியில் எழுதப்படும் கடித போக்குவரத்தை தான் மக்கள் எளிதாக புரிந்து கொள்வர்.
அவ்வாறு இருக்கையில் ஆங்கிலத்தை நாம் ஏன் துாக்கிப் பிடிக்க வேண்டும்? எனக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் தான் எனக்குத் தெரியும்.
ஏதோ, 5 - 7 சதவீதம் மக்கள் எதிர்க்கின்றனர் என்பதற்காக, 90 - 95 சதவீத மக்களுக்கு தெரிந்த மொழியை நாம் புறக்கணிக்க முடியாது. எனவே, என் தலைமையிலான துறையின் அனைத்து தகவல் பரிமாற்றங்களும், ஹிந்தி மொழியில் தான் இருக்கும். அதைத் தான் நான் விரும்புகிறேன்.
ஹிந்தி தான் என் தாய்மொழி. மேலும், அது தான் எங்கள் அடையாளம். என் தாய்மொழியில் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளத் தான் நான் விரும்புவேன். என் தலைமையின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும், ஹிந்திக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும். அதன் பெருமையை தான் பறைசாற்றுவேன்.
இவ்வாறு கூறினார்.
அதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஹிந்தி மொழி தான் எங்கள் தேசிய மொழி என மஹிபால் தண்டா கூறுவதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
அதே நேரத்தில், ஹரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சராக, அந்த மாநில இளைஞர்களுக்கு, வரும் தலைமுறைக்கு அவர் சொல்ல விரும்புவது, ஆங்கிலம் படிக்க வேண்டாம்; ஹிந்தி மட்டும் கற்றுக் கொள்ளுங்கள் என கூறுவதை ஏற்க முடியாது.
அவ்வாறு அவர் கூறினால், வளர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் இருந்து நாம் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். எனவே, ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். தேவையில்லாமல் அதை எதிர்ப்பது கூடாது.
இந்த உலகம் முழுவதும் இணைப்பு மொழியாக ஹிந்தி தான் உள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. ஆங்கிலம் தெரிந்தால் தான், இந்த உலகின் கதவுகள் வேலைவாய்ப்பிற்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களுக்கு திறக்கும்.
உதாரணமாக குருகிராம் நகரில், 10 லட்சம் பேர் ஹிந்தி மொழி தெரியாதவர்கள் உள்ளனர். அவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள், ஆங்கிலத்தையே பேசுபவர்களாக உள்ளனர். ஹரியானா மாநில இளைஞர்களுக்கு திறன்களை வளர்த்துக் கொண்டு, ஆங்கிலத்தில் சிறப்பான உரைநடை திறன் படைத்திருந்தால், இந்த மாநிலத்தின் நல்ல வேலைகள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த மாநிலம் மட்டுமின்றி புனே, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் என பல நகரங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இது, இன்டர்நெட் காலம், செயற்கை நுண்ணறிவு, இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் வேகமான வளர்ச்சி உள்ளது. எனவே, நம் இளைஞர்களுக்கு ஹிந்தி மொழி தெரிவது அவசியம் தான் என்ற போதிலும், ஆங்கில அறிவு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.