ADDED : மார் 19, 2025 11:07 PM
விக்ரம் நகர்:“வரும் 2027ம் ஆண்டுக்குள் நகரில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறினார்.
போக்குவரத்துத் துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது:
வரும் 2027ம் ஆண்டுக்குள் மாநில அரசு, பொதுப் போக்குவரத்தில் பயன்படுத்தும் அனைத்து பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது.
நகரில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்த முயற்சி உள்ளது. அடுத்த மாதம் பொதுப் போக்குவரத்தில் புதிதாக 1,000 மின்சார பேருந்துகள் சேர்க்கப்பட உள்ளது.
டில்லியை இந்தியாவின் மின்சார வாகனத் தலைநகராக மாற்றுவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை. மாற்றத்திற்காக சார்ஜிங் உள்கட்டமைப்பு விரைவாக உருவாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக குறுகலான பகுதிகளிலும் கிராமப்புற, கடைசி மைல் இணைப்பையும் மேம்படுத்துவற்கான போக்குவரத்து வலையமைப்பை மாநில அரசு உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.