கொப்பரை தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு அரசே வாங்கும்படி அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்
கொப்பரை தேங்காய் விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு அரசே வாங்கும்படி அனைத்து கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 14, 2024 04:42 AM

பெங்களூரு, : கொப்பரை தேங்காய் விலை சரிவு குறித்து, சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும், அரசை வாங்கும்படி வலியுறுத்தி பேசினர்.
கர்நாடக சட்டசபையில் விதி எண்: 69ன் கீழ் நடந்த விவாதம்:
ம.ஜ.த., - ரேவண்ணா: கொப்பரை தேங்காய் விளைவிப்பவர்கள் கஷ்டத்தில் உள்ளனர். கொப்பரை தேங்காய் விலை சரிந்துள்ளதால், 9 மாவட்டங்களில் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். எனவே ஒரு குவிண்டாலுக்கு 15,000 ரூபாய் விலைக்கு வாங்க வேண்டும்.
எங்களால் முடியாது என்று தேர்தல் நேரத்தில் கை விரிக்க வேண்டாம். தேங்காய் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து, ஹாசன் மாவட்ட ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா ஆகியோரை சந்தித்து தெரிவிக்கப்பட்டது.
இரண்டு, மூன்று நாட்களில் மத்திய அரசு வாங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், மாநில அரசு கொப்பரை தேங்காய் வாங்குவது நிறுத்தியுள்ளதை, மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் யார் வேண்டுமானாலும் வாங்கட்டும். ஆனால், விவசாயிகள் பிரச்னை தீர்க்க வேண்டும்.
காங், - சிவலிங்கேகவுடா: மாநில அரசு குவிண்டால் கொப்பரை தேங்காய்க்கு, 1,500 ரூபாய் மானியம் தருவதை ரேவண்ணா குறிப்பிடவில்லை. மத்திய அரசு, குவிண்டாலுக்கு 12,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு, மாநில அரசு, 1,500 ரூபாய் மானியம் தருகிறது.
இதை கேட்ட ரேவண்ணா கடும் ஆக்ரோஷத்துடன் பேசியதால், பதிலுக்கு சிவலிங்கேகவுடாவும் பேசியதால், வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவலிங்கேகவுடா: நான் பேசினால், உங்களுக்கு என்ன பிரச்னை. ஏன் இடையூறு செய்கின்றீர். விவசாயிகள் பிரச்னை தீர வேண்டும்.
பா.ஜ., - சுரேஷ்கவுடா: இங்கு அரசியல் வேண்டாம். கொப்பரை தேங்காய் வாங்குவது நிறுத்தப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதியுங்கள்.
சிவலிங்கேகவுடா: எனக்கு தெரியும், நாங்கள் ஒன்றும் அரசியல் செய்யவில்லை. வருவாய் துறை அமைச்சருடன் நானும் புதுடில்லி சென்று, மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ளேன். மத்திய அரசுக்கு சொல்லி உடனடியாக கொப்பரை தேங்காய் வாங்கும்படி அழுத்தம் கொடுங்கள். சில போலி முகவர்களால், விவசாயிகளுக்கு அநீதி ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகள் பயனடைய வேண்டும்.
இவரது பேச்சுக்கு, அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
துணை முதல்வர் சிவகுமார்: கொப்பரை தேங்காய் விவசாயிகள் பிரச்னை குறித்து, உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தீவிரமான விஷயம். இது தொடர்பாக இன்று விவாதித்து விளக்கமான பதில் அளிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

