சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
ADDED : மார் 27, 2025 01:24 AM

புதுடில்லி : சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உத்தரவை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது; மேலும் நீதிபதிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 2021ல் காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பவன், ஆகாஷ் என்ற இரு இளைஞர்கள் மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அந்தச் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால், அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.
சர்ச்சை
கைது செய்யப்பட்ட அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ், பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் விபரம்:
ஒரு பெண்ணின் அல்லது சிறுமியின் மார்பகத்தை தொடுவது, அவர் அணிந்திருந்த பைஜாமாவின் நாடாவை அறுத்தது ஆகியவை பாலியல் பலாத்காரமோ, பலாத்கார முயற்சியோ ஆகாது. இது, குறைந்த தண்டனை உடைய பாலியல் சீண்டலாகவே பார்க்க முடியும். பலாத்கார முயற்சிக்கும், அதற்கு தயாராகுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெண்கள் அமைப்பு ஒன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், இதை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அமர்வு கூறியதாவது:
இதுபோன்ற வழக்குகளில் இத்தகைய கட்டங்களில் தடை விதிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், இந்த வழக்கின் உத்தரவில் உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வார்த்தைகள், தடை விதிக்க வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளியுள்ளது. மிகவும் பொறுப்பற்ற முறையில், மனிதநேயம் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வளவு கடுமையான கருத்தைக் கூற வேண்டியுள்ளதற்கு வேதனைப்படுகிறோம்.
இந்த வழக்கில், ஏதோ உணர்ச்சி வேகத்தில், நீதிமன்ற அறையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. கடந்தாண்டு நவம்பரில் இந்த வழக்கு விசாரணை முடிந்துள்ளது. அதற்கு, நான்கு மாதங்களுக்குப் பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு போதிய அவகாசம் இருந்துள்ளது. அதனால், நன்கு யோசித்து, ஆய்வு செய்துதான், அவர் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும்.
பொறுப்பில்லாத வகையிலும், மனிதநேயம் இல்லாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எது உகந்ததாக இருக்கும் என்று நினைக்கிறாரோ, அந்த நடவடிக்கையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எடுக்கலாம்.
இவ்வாறு அமர்வு கூறியது.
இந்த வழக்கு தொடர்பாக தங்களுடைய தரப்பு வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய, மத்திய அரசு, உத்தர பிரதேச அரசு மற்றும் வழக்கில் தொடர்புடையோருக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணை, இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக, வழக்கறிஞர்கள் அமர்வில் குறிப்பிட்டனர். அவற்றையும் இந்த மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக அமர்வு கூறியது.