பொறுப்பற்ற குற்றச்சாட்டு;காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
பொறுப்பற்ற குற்றச்சாட்டு;காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
ADDED : அக் 29, 2024 07:45 PM

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தெரிவித்த புகார்களை தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்தது; பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளால் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.ஆனால், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்தன. பா.ஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் நொந்து போன காங்கிரஸ் தலைவர்கள், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், காங்கிரஸ் அளித்த புகாரை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கு ஆணையம் அனுப்பியுள்ள பதிலில், தன் கடுமையான கண்டனத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.ஆணையம் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டு எண்ணிக்கை நடைமுறை மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதால், குழப்பமும், பொது அமைதியின்மையும் ஏற்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் நடந்த குறிப்பிட்ட 5 சம்பவங்களை தெரிவித்துள்ள ஆணையம், தேர்தல் நடைமுறைகளின் மீது எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ந்து புகார்களை கூறுவதை தவிர்க்கும்படியும் காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளது.