வாலாஜா -- ராணிப்பேட்டை 4 வழி சாலைக்கு நிதி ஒதுக்கீடு
வாலாஜா -- ராணிப்பேட்டை 4 வழி சாலைக்கு நிதி ஒதுக்கீடு
ADDED : டிச 20, 2024 02:15 AM
புதுடில்லி, டிச. 20-
வாலாஜாபேட்டை - - ராணிப்பேட்டை வழியாக, ஆந்திரா செல்வதற்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்க, 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், 'சிப்காட்' தொழிற்பூங்கா, மத்திய அரசின் 'பெல்' நிறுவனம் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் வர்த்தக போக்குவரத்துக்காக, வாலாஜாபேட்டையில் இருந்து - ராணிபேட்டை, திருவளம், சேர்க்காடு கூட்ரோடு வழியாக ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்ட எல்லை வரை, 28 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 2010ல் முடிவு செய்தது.
பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த திட்டத்திற்கு, மத்திய நெடுஞ்சாலை துறை தற்போது 1,338 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 40ல், வாலாஜாபேட்டையில் இருந்து ஆந்திர மாநில எல்லை வரை 28 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்க 1,338 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளோம்.
இருபுறமும் சர்வீஸ் சாலையுடன் அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலையில், நான்கு முக்கிய பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் இரண்டு கட்டப்படும்.
இந்த சாலை கட்டுமான பணி முழுமையடைந்தால் வாகன ஓட்டிகள் சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலுார் செல்வது எளிதாகவும், ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் பெல் நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை அனுப்ப வசதியாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.