பெங்களூரில் தொழில் வழித்தடம் அமைக்க ஒதுக்கீடு ரூ.27,000 கோடி!
பெங்களூரில் தொழில் வழித்தடம் அமைக்க ஒதுக்கீடு ரூ.27,000 கோடி!
ADDED : பிப் 17, 2024 04:39 AM

பெங்களூரு: பெங்களூரில், தொழில் வழித்தடம் அமைக்க, மாநில அரசு பட்ஜெட்டில், 27,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரயில், சாலை மேம்பாடு, குடிநீர், போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு என பல திட்டங்களுக்கு முதல்வர் சித்தராமையா தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நிதித் துறை பொறுப்பு வகிக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த, 2024 - 25க்கான பட்ஜெட்டில், பெங்களூரு நகர வளர்ச்சிக்கு பல திட்டங்கள் அறிவித்துள்ளார். அதன் விபரம்:
l பெங்களூரு நகரை உலக தரமானதாக மேம்படுத்த, 'பிராண்ட் பெங்களூரு' திட்டம் அமல்படுத்தப்படும்
l பெங்களூரு மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பதற்காக, 2024 - 25ம் ஆண்டில் 6,000 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு
l சாலைகளில், விரைவில், 'ஒயிட் டாப்பிங்' பணிகள் முடிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நகரின் முக்கியமான 28 சிக்னல்களில், ஜப்பான் அரசு உதவியுடன், அதிநவீன போக்குவரத்து சிக்னல் முறை அறிமுகம் செய்யப்படும். 13 சதவீதம் வாகன நெரிசல் குறையும். ஹெப்பால் சிக்னலில் முதல் சுரங்கப்பாதை அமைக்கப்படும்
l பொருளாதாரம் மேம்படும் வகையில், புறநகர் வட்ட சாலையை, பெங்களூரு தொழில் வழித்தடம் என்ற புதிய நோக்கத்துடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, 27,000 கோடி ரூபாயில், 73 கி.மீ., துாரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படும்.
விளம்பர கொள்கை
l நடப்பாண்டு முதல் விளம்பர கொள்கை அமல்படுத்தி, அதன் மூலம் 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு
l பெங்., மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 20 லட்சம் சொத்துகளின் சொத்து வரி ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, 2024 - 25 முதல் ஆன்லைன் மூலம் பட்டா, வரி ரசீதுகள் வழங்கப்படும்
l கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளில், 100 கி.மீ., துாரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்
l பெங்., நகரில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 250 மீட்டர் உயரமான, 'ஸ்கை டெக்' எனும் வானுயர்ந்த தளம் அமைக்கப்படும்.
1,334 மின்சார பஸ்கள்
l பெங்., மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், நகர வளர்ச்சி ஆணையத்துக்கு உட்பட்ட கட்டடங்களில், மின்சார கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், சோலார் மின்சார பூங்கா அமைக்கப்படும்
l பெங்., புறநகர் ரயில் திட்ட பணிகளுக்கு, ஐரோப்பிய முதலீட்டு வங்கி மற்றும் ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ., வங்கியிடம் கடன் பெறப்படும். மத்திய அரசிடமும் கூடுதல் நிதி கேட்கப்படும்
l பி.எம்.டி.சி., சார்பில், 1,334 புதிய மின்சார பஸ்கள், 820 டீசல் பஸ்கள் வாங்கப்படும். மகளிர் பயணியரின் பாதுகாப்பு கருதி, பஸ்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க 'மொபைல் செயலி' அறிமுகம் செய்யப்படும்
காவிரி 5ம் கட்ட திட்டம்
l மொத்தம் 775 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட, காவிரி ஐந்தாம் கட்ட திட்டம் 5,550 கோடி ரூபாயில், 2024 மே மாதம் துவங்கப்படும். இதன் மூலம், 12 லட்சம் மக்களுக்கு, தினமும் தலா 110 லிட்டர் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும்
l இத்திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகளை, 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும். 13 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைத்து, தினமும் 100 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும்
l ஏழு கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள், 441 கோடி ரூபாயில், மேம்படுத்தப்படும். இதன் மூலம், தினமும் 268 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும்
l பெங்களூரு மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட, 110 கிராமங்களுக்கு 200 கோடி ரூபாயில் சுத்தமான குடிநீர் வழங்கும் 2ம் கட்டம் துவங்கப்படும்
l வீடுகளில் இருந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் வரை, கழிவுகளை முறைப்படி மேலாண்மை செய்ய, பெங்களூரு நகர மாவட்டத்தை நான்கு மண்டலங்களாக பிரித்து, தனி தனி வல்லுனர்கள் குழு நியமிக்கப்படும். புறநகர் பகுதியில், நான்கு திசைகளிலும் 50 முதல் 100 ஏக்கர் நிலம் அடையாளம் கண்டு, அடுத்த 30 ஆண்டுகளுக்கு விஞ்ஞான ரீதியில் குப்பை நிர்வகிப்பு செய்யப்படும்.
நள்ளிரவு வரை
l பெங்., மாநகராட்சியின் வனம், ஏரி, தோட்டக்கலை பிரிவுகள் 'வனம், சுற்றுச்சூழல், வானிலை மாற்றம் நிர்வகிப்பு பிரிவு' என்று பெயர் மாற்றம் செய்யப்படும். மரம், ஏரி, பூங்காக்களை மேம்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும்
l சர்வக்ஞர் நகர் சட்டசபை தொகுதியில் உள்ள சர்வக்ஞர் பூங்கா, பெங்., மாநகராட்சி உதவியுடன் மேம்படுத்தப்படும்
l பெங்களூரு மற்றும் மற்ற 10 மாநகராட்சி பகுதிகளில், வணிகம், வியாபார கடைகளை நள்ளிரவு 1:00 மணி வரை திறந்திருக்கலாம்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.
விமான நிலையத்துக்கு
2026ல் மெட்ரோ ரயில்
பெங்களூரு மெட்ரோ ரயில்களில், தினமும் 8 லட்சம் பயணியர் பயணம் செய்கின்றனர். தற்போது, 74 கி.மீ., துாரத்துக்கான பணிகள் நடக்கின்றன. 2025 மார்ச்சுக்குள், 44 கி.மீ., துாரத்துக்கான புதிய மெட்ரோ ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படும். 2ம் கட்டம், 2 ஏ கட்டம் திட்டத்தின் கீழ், வெளிவட்ட சாலை முதல், விமான நிலையம் வரையிலான திட்டம், 2026 ஜூனில் முடிவடையும்.
மொத்தம், 15,611 கோடி ரூபாயில் 3ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. 3ஏ கட்டத்தின் கீழ், சர்ஜாபுரா முதல் அகரா, கோரமங்களா டெய்ரி சதுக்கம், மேக்ரி சதுக்கம் மூலம், ஹெப்பாலை இணைக்கும் திட்டத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.