பதிவு செய்யாத டேங்கர் லாரிகள் பறிமுதல் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.556 கோடி ஒதுக்கீடு
பதிவு செய்யாத டேங்கர் லாரிகள் பறிமுதல் குடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.556 கோடி ஒதுக்கீடு
ADDED : மார் 05, 2024 07:24 AM

பெங்களூரு: ''பெங்களூரு நகரில் உள்ள அனைத்து தண்ணீர் டேங்கர் உரிமையாளர்களும் 7ம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால் பறிமுதல் செய்யப்படும்,'' என, துணை முதல்வர் சிவக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால், பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதை தீர்ப்பது தொடர்பாக, பெங்., மாநகராட்சி தலைமை அலுவலகத்தில், துணை முதல்வர் சிவகுமார், நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ்சிங், தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத், பெங்., குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், துணை முதல்வரின் செயலர் ராஜேந்திர சோழன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கையிருப்பு
நீண்ட நேர ஆலோசனைக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள 3,500 தண்ணீர் டேங்கர்களில், 219 டேங்கர்கள் மட்டுமே, அதாவது 10 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறிய, பெரிய, பால் டேங்கர்கள் விரைவில் அரசால் கையகப்படுத்தப்படும். குடிநீர் வடிகால் சார்பில், ஏற்கனவே தண்ணீர் விநியோகத்திற்காக 210 டேங்கர்களை பயன்படுத்துகிறது.
தண்ணீர் அரசுக்கு சொந்தமானது. இது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானது அல்ல. எந்த தண்ணீரை வேண்டுமானாலும் கட்டுப்படுத்தும் உரிமை அரசுக்கு உண்டு.
பெங்களூரு புறநகரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்தும், தண்ணீர் வழங்க தயாராக இருக்க வேண்டும். தண்ணீர் பிரச்னையை தீர்க்க தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்காது. பிரச்னையை தீர்க்க 556 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது.
ரூ.10 கோடி
தண்ணீர் பிரச்னையை தீர்க்க பெங்களூரு நகரின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் தலா 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். வார்டு வாரியாக புகார் மையங்கள் திறக்கப்படும். பிரச்னையை கேட்க கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும்.
நான், மூத்த அதிகாரிகள் உட்பட, அடிக்கடி, அடிக்கடி ஆய்வு நடத்துவோம். குடிநீர் வழங்குவது அரசின் பொறுப்பு. பெங்களூரு மக்கள் பீதியடைய வேண்டாம். அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பது நமது கடமை.
தற்போது நகரில் 16,781 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இதில், 6,997 ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு, 7,784 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
புதிய ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கும், தமிழக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் நிறுவனங்களுக்கும் இடையே கட்டணங்கள் குறித்து சில குழப்பங்கள் உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்படும்.
பால் டேங்கர்கள்
பயன்படுத்தப்படாத பால் டேங்கர்களை தண்ணீர் வினியோகத்திற்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கே.எம்.எப்., கீழ் உள்ள அனைத்து மையங்களில் இருந்தும் டேங்கர்களை கொண்டு வந்து சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பிரச்னை தீரும் வரை இந்த டேங்கர்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் சப்ளை செய்ய டேங்கர்கள் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இந்த குழப்பத்தை சங்கத்துடன் விவாதித்து, கி.மீ.,க்கு தகுந்தவாறு தண்ணீர் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
மே மாத இறுதிக்குள் 110 கிராமங்களுக்கு காவிரி நீர் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்துக்கும் தனி பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செயல்படாத அனைத்து சுத்தமான குடிநீர் மையங்களையும் செயல்பட வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் தண்ணீரை பயன்படுத்தாமல், வறட்சி காலத்தில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

