முன்னாள் அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் ஒதுக்கீடு
முன்னாள் அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 12, 2024 03:51 AM

புதுடில்லி: ராணுவத்தின் அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றி வெளியேறும் வீரர்களுக்கு, மத்திய தொழிற்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப் படையில் இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் என அப்படைகளின் தளபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு கடந்த 2022ல் ராணுவத்துக்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17 - 21 வயதினர், முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் அக்னி வீரர்களாக சேரலாம். அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதில் 25 சதவீதத்தினர் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்படுவர்.
இந்நிலையில் மீதமுள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு பாதுகாப்பு படைகளில் இடஒதுக்கீட்டை அறிவித்தது. அவை விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக மத்திய தொழிற்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் துணை ராணுவப் படை ஆகியவற்றின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படைகளில் உள்ள காலி பணியிடங்களில் 10 சதவீதம் முன்னாள் அக்னிவீரர்களுக்கு ஒதுக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான வயது வரம்பில் ஐந்து முதல் மூன்று ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.