முதல்வர் மனைவிக்கு 'முடா'வில் மனைகள் ஒதுக்கியது சட்டவிரோதம்!; அமலாக்க துறையினர் விசாரணையில் கண்டுபிடிப்பு
முதல்வர் மனைவிக்கு 'முடா'வில் மனைகள் ஒதுக்கியது சட்டவிரோதம்!; அமலாக்க துறையினர் விசாரணையில் கண்டுபிடிப்பு
ADDED : டிச 05, 2024 07:25 AM
பெங்களூரு: 'முதல்வர் மனைவிக்கு, 'முடா'வில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கியது சட்டவிரோதமானது' என, அமலாக்கத் துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 1,081 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதன் வாயிலாக, 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், புதிதாக லே -அவுட்டுகள் அமைக்கும் பணிகள், பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 50:50 திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் 5,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கவர்னர் உத்தரவு
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை, 'லே- அவுட்' அமைப்பதற்காக முடா கைப்பற்றி இருந்தது. இதற்கு மாற்றாக விஜயநகரில் 14 வீட்டு மனைகளை முடா ஒதுக்கி இருந்தது.
சித்தராமையா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிலம் அதிக விலை உள்ள விஜயநகரில் மனைவிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார். முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கவர்னரும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து முதல்வர் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல்வர், அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன், நிலம் விற்ற தேவராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
'முடாவில் ரெய்டு'
இதற்கிடையில், முடாவில் வீட்டுமனைகள் ஒதுக்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கங்கராஜு என்பவர், அமலாக்கத் துறையில் புகார் செய்தார். அந்தப் புகாரின்படி, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
'முடா' அலுவலகம், முடா முன்னாள் கமிஷனர்கள் தினேஷ்குமார், நடேஷ் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது சிக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர். முதல்வரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என்று கூறப்பட்டது.
700 கோடி ரூபாய்
இந்நிலையில், சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு, அமலாக்க துறையினர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முடாவில் வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. 1,095 வீட்டுமனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளனர். இதில் முதல்வர் மனைவிக்கு ஒதுக்கிய 14 வீட்டு மனைகளும் அடங்கும். இதன் மூலம் 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.
வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விஷயத்தில் அரசியல்வாதிகள், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி உள்ளனர். பினாமி, போலி ஆவணங்கள் தயாரித்து, முடா அதிகாரிகள் இஷ்டத்திற்கு வீட்டுமனைகளை ஒதுக்கி உள்ளனர்.
வீட்டுமனைகள் ஒதுக்குவதற்காக அரசியல் பிரமுகர்களிடம் இருந்து வாங்கி வரப்பட்ட 1,946 கடிதங்கள் காணாமல் போய் உள்ளன. சட்டவிரோதமாக வீட்டுமனைகள் ஒதுக்கியது குறித்தும், கடிதங்கள் காணாமல் போனது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அமலாக்கத் துறையில் இந்த கடிதம் வாயிலாக, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 'அவர் பதவி விலக வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதுகுறித்து, மாண்டியா கே.ஆர். பேட்டில் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
என் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதி செல்லும் என நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மனு செய்துள்ளேன். அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
நாளை (இன்று) விசாரணை நடக்க உள்ள நிலையில், லோக் ஆயுக்தாவுக்கு, அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தின் மீது செல்வாக்கு செலுத்த பார்க்கின்றனர்.
'முடா'வில் நடந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை. லோக் ஆயுக்தாவுக்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் கசிய விட்டதன் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.