பா.ஜ., தலைவர் அறக்கட்டளைக்கு ரூ.4.8 கோடி நிலம் ஒதுக்கீடு; மஹா., எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
பா.ஜ., தலைவர் அறக்கட்டளைக்கு ரூ.4.8 கோடி நிலம் ஒதுக்கீடு; மஹா., எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
ADDED : செப் 26, 2024 04:12 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைவரின் அறக்கட்டளைக்கு 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஸ்ரீ மகாலஷ்மி ஜகதாம்பா சான்ஸ்தன் டிரஸ்ட் உள்ளது. கல்வி அறக்கட்டளையான இதன் தலைவராக பா.ஜ., தலைவர் சந்திரசேகர் பவன்குலே உள்ளார்.
இந்த அறக்கட்டளைக்கு 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து மாநில அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: நேரடி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு தரம் வாய்ந்ததாக அந்த அறக்கட்டளையின் நிலை இல்லை. உயர் கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்வி கற்றுகொடுக்கும் அளவுக்கு இல்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான திட்டம், இடம் குறித்து விளம்பரம் மற்றும் விண்ணப்பங்கள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல், திங்கள் அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், எந்தவித ஆலோசனையும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் நேரடி ஒதுக்கீட்டு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இப்படி நிலம் ஒதுக்கீடு செய்ததற்கு மாநில எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் விஜய் வதெட்டிவர் கூறுகையில்,பொது நிலத்தை மாநில அரசு முறைகேடாக பயன்படுத்துகிறது என்றார்.
சரத்பவார் (என்.சி.பி) அணியின் தலைவரான அனில் தேஷ்முக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மஹா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இப்பிரச்னை குறித்து பவன்குலே கூறியதாவது: இது என்னுடைய டிரஸ்ட் இல்லை. நான் இதற்கு தலைவராக மட்டுமே இருக்கிறேன். இப்பதவி இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மாறிவிடும்,' என்றார்.
வருவாய் துறை அமைச்சர் ராதாகிருஷ்னா விகே பாட்டீல் கூறுகையில், மாநில அரசு திட்டத்தை அனுப்பியது. அதற்கு வருவாய் துறை ஒதுக்கீட்டிற்கு உதவியது. 2019ம் ஆண்டிலேயே அந்த டிரஸ்ட் நிலம் ஒதுக்க வேண்டும் என கேட்டு கொண்டது. அதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள், விளம்பரப்படுத்தினர்.
அதன்பிறகு 2023ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஜூனியர் கல்லுாரி, அறிவியல்-கலை -வணிக கல்லுாரி, நர்சிங் கல்லுாரி ஆகிய துறைகள் குறித்து திட்டம் குறித்து நிலம் நேரடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வருவாய்துறையிடம் கேட்டது. இந்த நிலையில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாடி, இதை அரசியல் ஆக்கி பெரிதாக்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

