நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
UPDATED : டிச 13, 2024 06:19 PM
ADDED : டிச 13, 2024 01:02 PM

ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலுங்கானா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 படம் வசூலில் இமாலய சாதனையை படைத்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா எனும் தியேட்டருக்கு வந்தார்.
எந்தவித முன்னறிவிப்புமின்றி வந்த அல்லு அர்ஜூனைக் காண கூட்டம் அலைமோதியது. இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி என்கிற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து. அத்தியேட்டரின் உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும் போலீசார்வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்தார். மேலும், படக்குழுவினர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவுவார்கள் என்று அறிவித்தார். அதோடு, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் நடிகர் அல்லு அர்ஜூன் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் இன்று நடிகர் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். தெரிந்தே மரணத்தை விளைவித்தல், திட்டமிட்டு கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் கைது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜாமின்
இந்நிலையில் இடைக்கால ஜாமின் கேட்டு, அல்லு அர்ஜூன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். இதனை ஏற்று அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட், அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. நீதபதி தனது உத்தரவில், நடிகர் என்பதற்காக, வாழ்வதற்கான உரிமையை அவரிடம் இருந்து பறிக்க முடியாது. மனுதாரருக்கு எந்த தவறான உள்நோக்கமும் இல்லை எனக்கூறியுள்ளார். இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜன.,25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.