அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; ஆவலுடன் காத்திருக்கிறோம் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி
UPDATED : ஜூன் 30, 2025 04:22 PM
ADDED : ஜூன் 30, 2025 04:11 PM

ஸ்ரீநகர்: 'அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மனதார நம்புகிறேன். யாத்ரீகர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்' என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை 3ல் தொடங்கி ஆகஸ்ட் 9ல் முடிகிறது. புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன என்று ஜம்மு-காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர். தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, முன்பதிவு 10 சதவீதம் குறைந்துள்ளது. அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புனித யாத்திரை வரும் பக்தர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக முன்பதிவுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின், உமர் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறவும், பிரார்த்தனை செய்து விட்டுயாத்ரீகர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பவும், அதிகமான யாத்ரீகர்கள் வருவார்கள் என்றும் நாங்கள் மனதார நம்புகிறோம். பிரார்த்தனை செய்கிறோம்.
அமர்நாத் யாத்திரை வரும் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துணைநிலை கவர்னர் இரண்டு முக்கிய கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார். ஒன்று அரசியல் தலைவர்களுடனும், மற்றொன்று பாதுகாப்பு அளிப்பது தொடர்பான கூட்டத்திலும் பங்கேற்றார்.
யாத்ரீகர்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜம்முவில் இருந்து யாத்திரை கொடியசைத்துத் தொடங்கப்படும். யாத்ரீகர்கள் வந்தவுடன் அன்புடன் வரவேற்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.