ADDED : ஜன 07, 2024 02:39 AM

விவசாயம் இன்று, இளம்தலைமுறையினர் மத்தியில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் கூட, வேலையை உதறிவிட்டு, விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர். இதுபோல பட்டதாரி பெண் ஒருவரும், விவசாயத்தில் அசத்தி வருகிறார்.
விஜயபுராவை சேர்ந்தவர் நிஷா நீலப்பா மாலி, 35. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்தார். ஆனால் விவசாயத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே, வேலையை ராஜினாமா செய்தார். விஜயபுராவில் இருந்து சோலாப்பூர் செல்லும் சாலையில், 5 ஏக்கரில் தோட்டம் வாங்கினார்.
அங்கு எலுமிச்சை, பப்பாளி, தென்னை மரக்கன்றுகள் முதலில் நட்டார். இதன்மூலம் நல்ல வருமானம் வந்தது. இதையடுத்து கரும்பு, வாழை, மாதுளை, மா, மிளகு செடிகளும், ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பூக்களையும் பயிரிட்டு வளர்க்கிறார். இதன்மூலம் அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து நிஷா நீலப்பா மாலி கூறியதாவது:
என் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. நான் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தாலும், விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆசை வந்தது. இதுகுறித்து என் கணவர் நீலப்பா மாலியிடம் தெரிவித்த போது, எனக்கு ஆதரவு தந்தார். தோட்டத்தில் செடிகளை பயிரிடுவதற்கு உதவினார். மஹாராஷ்டிரா சென்று பல வகை செடிகளை வாங்கி வந்தோம்.
எங்கள் தோட்டத்திற்கு சித்தேஸ்வரா நர்சரி கார்டன் என்று, பெயர் வைத்து உள்ளோம். விவசாயம் செய்வதன் மூலம், தன்னிறைவு வாழ்க்கை வாழ்கிறேன்.
எங்கள் தோட்டத்தில் 60 தொழிலாளர்களுக்கு, வேலை கொடுத்து உள்ளோம். தோட்டத்தை சுற்றி பார்க்கவும், நாங்கள் வளர்க்கும் செடிகளை பற்றி அறிந்து கொள்ளவும், தினமும் ஏராளமனோர் வருகை தருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.