இலங்கையின் புலிகள் அமைப்பை புனரமைக்க கராச்சிக்கு ஹவாலா மூலம் நிதி அனுப்பியது அம்பலம்
இலங்கையின் புலிகள் அமைப்பை புனரமைக்க கராச்சிக்கு ஹவாலா மூலம் நிதி அனுப்பியது அம்பலம்
ADDED : நவ 12, 2025 02:57 AM

புலிகள் அமைப்பின் செயல்பாடுகளை இந்தியாவில், மீண்டும் புனரமைப்பதற்காக, போதை மருந்து கடத்தலில் கிடைத்த பணம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு ஹவாலா மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவிலும் இலங்கையிலும் புலிகள் அமைப்பை, மீண்டும் புனரமைக்க ஏதுவான நடவடிக்கைகளை, யாராவது எடுத்து வருகிறார்களா என்பது குறித்து, என்.ஐ.ஏ., தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2022, மார்ச் 15ல், இலங்கையைச் சேர்ந்த குணா, புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணா உட்பட 10 பேர், தமிழகத்தின் திருச்சியில் உள்ள சிறப்பு தடுப்பு காவல் மையத்தில் ஒன்றுகூடி, ஆலோசனை கூட்டம் நடத்தினர். இவர்கள் அனைவருக்குமே, நோக்கம் ஒன்றாக இருந்துள்ளது.
குற்றப்பத்திரிகை போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றை கடத்துவதன் மூலம், மிகப்பெரிய அளவில் பணத்தை திரட்ட முடியும். அந்த பணத்தைக் கொண்டு, புலிகள் அமைப்பை, புனரமைக்கும் நடவடிக்கைகளை துவங்கலாம் என்று, அந்த கூட்டத்தில் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சதிச்செயலை கண்டுபிடித்து, இவர்கள், 10 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2023 ஜூனில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டை விலக்கிக் கொண்டு தன்னை விடுவிக்கும்படி, குணா என்ற குணசேகரன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு கடந்த அக்டோபர் 17ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தாங்கள் கைப்பற்றியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும், கோர்ட்டில் சமர்ப்பித்தது. அந்த ஆதாரங்கள்தான், மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.
உறுதி தேசிய புலனாய்வு அமைப்பு அளித்துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி, இலங்கையைச் சேர்ந்த இவர்கள், தங்கள் திட்டத்திற்கு உதவும் வகையில், பாகிஸ்தானின் கராச்சியில், ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகள் கடத்துவதில் அனுபவம் வாய்ந்த ஹாஜி சலீம் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
சர்வதேச அளவில், போதை மருந்து கும்பலுடன் நல்ல தொடர் பில் உள்ள ஹாஜி சலீமுக்கு, இந்த குணா என்ற குணசேகரன், பணத்தை அனுப்பியுள்ளார்.
இதற்கான, ஆவணங்கள், கிரிப்டோ பரிமாற்றம், மொபைல் போன் தரவுகள், நிதி தொடர்பான தகவல்கள் என, டிஜிட்டல் ஆதாரங்கள் அனைத்தையும், குணா மற்றும் அவனது மகன் திலீபன் ஆகியோரிடமிருந்து கைப்பற்றியதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இவற்றை ஆய்வு செய்தபோது, பணப்பரிவர்த்தனை அனைத்தும், ஹவாலா மூலமாக நடந்துள்ளது என்பதையும், தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், உறுதிபடுத்தியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-நமது டில்லி நிருபர்-:

