அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
அம்பேத்கர் இறுதி சடங்கு; காங்கிரஸ் மீது யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 13, 2025 06:13 PM

லக்னோ: 'அம்பேத்கரின் இறுதி சடங்குகளை டில்லியில் செய்ய காங்கிரஸ் அனுமதிக்கவில்லை,' என்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
உ.பி., மாநிலம் லக்னோவில் 'பாரத ரத்னா' பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் சம்மான் சமரோஹ் என்னும் பயிலரங்கம் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார்.
அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கரை தேர்தலில் தோல்வியடையச் செய்தனர்.
1956 டிசம்பர் 6 அன்று டில்லியில் உள்ள அவரது வீட்டில் இறந்த டாக்டர் அம்பேத்கரின் இறுதிச் சடங்குகள் புத்த மரபுகளின்படி செய்யப்பட்டன. அவரது இறுதி ஊர்வலம் மும்பையில் இருந்து டில்லிக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரினர்.
ஆனால், இறுதி சடங்குகளை டில்லியில் நடத்த காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. அவரது நினைவிடத்தை எழுப்பவும் அனுமதிக்கவில்லை. மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள சைத்ய பூமியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதில் அக்கால காங்கிரஸ் அரசு தோல்வியடைந்தது.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.