ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
ADDED : அக் 18, 2024 11:05 PM
பீன்யா: 'எங்களிடம் ஆம்புலன்ஸ் இருக்கும்போது, நீங்கள் ஏன் சடலத்தைக் கொண்டு வந்தீர்கள்?' என கூறி தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய, சுடுகாட்டு மேற்பார்வையாளர், ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.
நெலமங்களா அரசு மருத்துவமனையில் இருந்து அக்., 15ம் தேதி இறந்தவர் உடலை பீன்யா எஸ்.ஆர்.எஸ்., சுடுகாட்டுக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிவராஜு, ஸ்ரீகாந்த் ஆகியோர் எடுத்து வந்தனர்.
சுடுகாட்டிற்குள் வந்தபோது, சுடுகாட்டை நிர்வகிக்கும் மஹாதேவம்மா, ''அரசு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை கொண்டுவர, எங்களிடம் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.
''நீங்கள் எதற்காக கொண்டு வந்து, எங்களுக்கு வர வேண்டிய வாடகையை எடுத்துக் கொள்கிறீர்கள்? நாங்கள் இப்பகுதியை சேர்ந்தவர்கள்; எங்களுக்கு தான் உரிமை உள்ளது,'' என கூறினார். இதனால் அவருக்கும், ஆம்புலன்ஸ்ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மஹாதேவம்மாவுக்கு ஆதரவாக, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மஞ்சு பேசினார்.
வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிவராஜு, ஸ்ரீகாந்த் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த அவர்கள் இருவரும், ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.