வாக்காளர் பட்டியலில் திருத்தம் 2.25 விண்ணப்பங்கள் வருகை
வாக்காளர் பட்டியலில் திருத்தம் 2.25 விண்ணப்பங்கள் வருகை
ADDED : நவ 28, 2024 08:42 PM
பழைய டில்லி:வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்ய 2.25 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக டில்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் ஆர் வாஸ் நேற்று தெரிவித்தார்.
வரும் ஜனவரியில் துல்லியமான புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், பெயர் நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பணிகள், அக்டோபர் 29ல் துவங்கின. நேற்று நிறைவடைந்தன. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் ஆர் வாஸ் நேற்று கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது தொடர்பாக கடைசி நாளான இன்று வரை (நேற்று) மொத்தம் 2.25 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஓட்டுச்சாவடி முதல்நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர். பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக 1.62 லட்சம் மனுக்களை பெற்றனர். இந்த பணிகள், ஆகஸ்ட் 20 முதல் மேற்கொள்ளப்பட்டன.
இந்த காலகட்டத்தில் ஓட்டுச்சாவடி குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. வரும் சட்டசபைத் தேர்தலில் பழைய 53 ஓட்டுச்சாவடிகள் நீக்கப்பட உள்ளன. வாக்காளர்களுக்கு வசதியாக 123 புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்படும்.
நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ள 45,000 விண்ணப்பங்கள் வந்தன.
அனைத்து விண்ணப்பங்களும் டிசம்பர் 24ம் தேதிக்குள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, இறுதி செய்யப்படும். அதுவரை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் போர்ட்டல், வாக்காளர் மையங்கள் வழியாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவோ புதிதாக பெயர் சேர்க்கவோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.