'இந்திய பொருளாதார வளர்ச்சியை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை'
'இந்திய பொருளாதார வளர்ச்சியை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை'
ADDED : ஆக 11, 2025 12:29 AM

போபால்: “இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி ஒரு சிலருக்கு, பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளாததால், கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை, ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் உயர்த்தினார்.
நட்புறவில் விரிசல் எனினும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எல்லாம் இந்தியா அடிபணியாது என திட்டவட்டமாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் நலனே முக்கியம் என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், இரு நாட்டின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களால், இதை எளிதாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானே எல்லாருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைக்கின்றனர். இதன் காரணமாகவே, இந்திய பொருட்கள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது.
'சூப்பர்' சக்தி இந்தியாவின் வளர்ச்சியை எந்தவொரு சர்வதேச சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா உறுதியாக, 'சூப்பர்' சக்தி கொண்ட நாடாக வளரும்.
உலக பொருளாதாரத்தில் கடந்த 2014ல், இந்தியா 11வது இடத்தில் இருந்தது. இப்போது முதல் நான்கு இடங்களுக்குள் வந்துவிட்டது. நம் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதவீதமாக இருக்கிறது.
பிரதமராக மோடி பதவியேற்றபோது, நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வெறும் 600 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 24,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.