UPDATED : பிப் 06, 2025 11:33 PM
ADDED : பிப் 06, 2025 11:29 PM

அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்களை கைகளில் விலங்கிட்டு, கால்களில் சங்கிலி மாட்டி ராணுவ விமானத்தில் கொண்டுவந்து இறக்கிய நிகழ்வு, நாடெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'இது அமெரிக்காவின் அப்பட்டமான மனித உரிமை மீறல்' என கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் முறையான விசா இல்லாமல் வசித்து வரும் வெளிநாட்டினரை நாடு கடத்தும் பணியில், அதிபர் டிரம்ப் அரசு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து வந்தவர்களை கொத்து கொத்தாக திருப்பி அனுப்புகிறது.
அமெரிக்காவில் 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக அரசு தகவல் சேகரித்துள்ளது. அவர்களும் படிப்படியாக திருப்பி அனுப்பப்படுவர். அதன் துவக்கப்புள்ளியாக, டெக்சாசில் இருந்து 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டுவரப்பட்டனர்.
நாள் முழுவதும் நீடித்த நீண்ட பயணத்தில் அவர்கள் கைகளில் விலங்கும், கால்களில் சங்கிலியும் மாட்டி உட்கார வைக்கப்பட்டனர். நகர முடியாமல் இருக்கையுடன் சங்கிலியால் பிணைத்துஇருந்தனர்.
இந்த காட்சிகளை அமெரிக்க அரசு வீடியோ எடுத்து உலகெங்கும் பார்க்கும் வகையில் பரப்புகிறது. 'எங்கள் நாட்டுக்குள் திருட்டுத் தனமாக நுழைந்தால் இப்படித்தான் திருப்பி அனுப்புவோம்' என்று அதில் அமெரிக்க எல்லை ராணுவம் எச்சரிக்கிறது.
இந்த அடாவடி செயலுக்கு, எதிர்க்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தன. பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவகாரம் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் காரசாரமான விவாதம் நடந்தது.
ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, காங்கிரஸ்: திரும்பி வரும் இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? இன்னும் எத்தனை பேர் இப்படி திருப்பி அனுப்பப்படுவர்?
சாகேத் கோகலே, திரிணமுல் காங்கிரஸ்: உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று பெருமை பேசும் அரசு, இந்தியர்களை அழைத்து வர விமானம் அனுப்பாதது ஏன்? நாட்டில் விமானங்களுக்கா பஞ்சம்?
சிவா, தி.மு.க.,: இந்தியர்களை திருப்பி அனுப்ப போகிறோம் என இந்திய துாதரகத்திடம் அமெரிக்க அரசு எப்போதோ கூறிவிட்டது.
அப்படி இருந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? 14 மணி நேரம் கைவிலங்கு, கால் சங்கிலியுடன் பயணம் செய்வது எவ்வளவு பெரிய இழிவு? இது நமக்கு அவமானம் இல்லையா?
சஞ்சய்சிங், ஆம்ஆத்மி: கை விலங்கிடுவது, சங்கிலியால் கட்டுவது எல்லாம் மனித தன்மையற்ற செயல். அத்தனை பேருக்கும் அந்த விமானத்தில் ஒரே ஒரு கழிப்பறை தான் இருந்துள்ளது. சிறு நாடுகள் கூட விமானம் அனுப்பி அழைத்து வரும்போது நாம் ஏன் அனுப்பவில்லை?
இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இரு சபைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டன. முன்னதாக, இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டதை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

