UPDATED : நவ 21, 2024 11:35 PM
ADDED : நவ 21, 2024 11:31 PM

புதுடில்லி: தன் தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறுவதற்காக இந்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க தயாரான தொழிலதிபர் கவுதம் அதானி, அந்த தகவலை மறைத்து, அமெரிக்கர்களிடம் கணிசமான முதலீடுகளை திரட்டியுள்ளார்; இது, தண்டனைக்குரிய குற்றம் என்று அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்து உள்ளது. அதன்படி அதானியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
---இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான தொழிலதிபர் கவுதம் அதானி, பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்தாண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.
மீண்டு வந்தார்
அப்போது அதானி பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால், ஓராண்டில் அந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்தார்.
எனினும், ஹிண்டன்பர்க் சொன்ன குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த வழக்கு மாறுபட்டது. நியூயார்க் நீதிமன்றத்தில், அந்த நாட்டின் நீதித்துறை இந்த குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை கண்காணிப்பு நிறுவனத்தின் சார்பிலும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக தனி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்ட விதிகளின்படி, அந்த நாட்டின் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனம் மற்றும் அந்த நாட்டின் பிரஜைகள் முதலீடு செய்துள்ள எந்த ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனமும், தங்களுடைய திட்டங்களுக்காக எவருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது.
கொடுத்தால், அது குறித்த தகவலை அமெரிக்க பங்குச் சந்தை நிர்வாக அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அந்த நிறுவனம் மீது அமெரிக்க சட்டங்களின் கீழ் வழக்கு தொடர முடியும்.
அந்த அடிப்படையில், கவுதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதற்காக சமர்ப்பித்த ஆவணங்களில், 'புகாரின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை நிரூபிக்கப்படும் வரை, அவர்கள் நிரபராதிகளாகவே பார்க்கப்படுவர்' என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரூ.17,000 கோடி லாபம்
அதானியின் நிறுவனம் தயாரிக்கும் சூரிய சக்தி மின்சாரத்தை, மாநில மின் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்காக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும், 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இதன் வாயிலாக அடுத்த 20 ஆண்டுகளில், 17,000 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதை மட்டும் சுட்டிக் காட்டியும், லஞ்சம் கொடுப்பதை மறைத்தும், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் கணிசமான முதலீடுகளை அதானி குழுமம் பெற்றுள்ளதாக வழக்கு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதானியின் உறவினரும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது மோசடி, சதி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பங்கு விலை சரிந்தது
கனடாவில் பிரபலமான சி.டி.பி.பி., எனப்படும் ஓய்வூதிய நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகள் மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி குறித்து தெரிந்தும், அதை இவர்கள் மறைத்ததாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வெளியானதும், மும்பை பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் வெளியிடும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.
ஆப்ரிக்க நாடான கென்யா, அதானி நிறுவனத்துடன் செய்திருந்த மின் உற்பத்தி பரிமாற்றம் மற்றும் நைரோபி விமான நிலைய நவீனமயம் ஆகிய இரண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.