ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்; அமித் ஷா திட்டவட்டம்
ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்; அமித் ஷா திட்டவட்டம்
ADDED : நவ 21, 2025 03:35 PM

புஜ் (குஜராத்): நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறி உள்ளார்.
குஜராத்தின் ஹரிபூரில் எல்லைப் பாதுகாப்பு படையின் 61வது எழுச்சி நாள் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க அவசியம். ஒவ்வொரு ஊடுருவல்காரரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் மிகவும் அவசியம்.
நாட்டில் உள்ள அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் வெளியேற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன். சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை ஒழிப்பதற்கான பிரசாரத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த அரசியல் கட்சிகள் எஸ்ஐஆர் நடைமுறை மற்றும் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை எதிர்க்கின்றன. தேர்தல் கமிஷனால் மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறையை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
பீஹார் தேர்தல் முடிவுகள்,ஊடுவல்காரர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தந்த எச்சரிக்கை.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மேலும் அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமித் ஷா கூறி உள்ளதாவது;
ஊடுருவலை தடுப்பது என்பது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல, ஜனநாயக அமைப்பு சேதப்படுத்துவதை தடுப்பதற்கும் அவசியமாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் இந்த ஊடுருவல்களைப் பாதுகாக்கும் பயணத்தை தொடங்கி இருக்கின்றன, இது தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிரானவை.
இவ்வாறு தமது பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் எஸ்ஐஆர் நடைமுறையானது குழப்பமானது மற்றும் ஆபத்தானது என்று விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

