மம்தா பானர்ஜியை சரமாரியாக விளாசிய அமித் ஷா; ஓட்டுக்காக அனைத்தையும் எதிர்ப்பதாக குற்றச்சாட்டு
மம்தா பானர்ஜியை சரமாரியாக விளாசிய அமித் ஷா; ஓட்டுக்காக அனைத்தையும் எதிர்ப்பதாக குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 02, 2025 12:58 AM
ADDED : ஜூன் 02, 2025 12:47 AM

கொல்கட்டா: ''முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே, 'ஆப்பரேஷன் சிந்துார், வக்ப் திருத்த சட்டம்' ஆகியவற்றை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். அவர் என்ன செய்தாலும், 2026ல் அங்கு பா.ஜ., வெற்றி பெறுவதை தடுக்க முடியாது. திரிணமுல் காங்., அரசின் ஆதரவோடு, முர்ஷிதாபாதில் கலவரங்கள் நடந்தன,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆவேசமாக தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
'ஹாட்ரிக்' வெற்றி பெற்று அரியணையில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகிறார்.
பாடம் புகட்டுவர்
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற இலக்கில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, 'ஆப்பரேஷன் பெங்கால்' என்ற பெயரில் பல்வேறு வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு நாட்கள் பயணமாக, மேற்கு வங்கத்துக்கு பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்துள்ளார்.
கொல்கட்டாவில் நேற்று நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதை மனதில் வைத்து, ஒவ்வொரு பா.ஜ., நிர்வாகியும், தொண்டரும் பணியாற்ற வேண்டும்.
முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்தவே, நம் ராணுவத்தின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்த்தார். இதன் வாயிலாக, நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரியரை அவர் அவமதித்துள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜிக்கு தக்க பாடம் புகட்ட மேற்கு வங்க தாய்மார்கள் மற்றும் சகோதரியர் தயாராகி விட்டனர். 2026 ஏப்ரலுக்கு பின், முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி இருக்க மாட்டார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ப் திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு, ஆளும் திரிணமுல் காங்., அமைச்சரே காரணம். அவர் தான் வெறுப்புணர்வை துாண்டி கலவரத்தை ஏற்படுத்தினார்.
ஊடுருவல்
அங்கு நடந்த வன்முறைகள் அனைத்தும், மாநில அரசின் ஆதரவோடு அரங்கேறின. இந்த கலவரத்தின் போது, எல்லை பாதுகாப்பு படையை பாதுகாப்பில் நிறுத்த மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், இதை திரிணமுல் அரசு அனுமதிக்கவில்லை. எல்லை பாதுகாப்பு படையினர் இருந்திருந்தால், ஹிந்துக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பர்.
நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, அவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அழகான மேற்கு வங்க மாநிலத்தை, ஊடுருவல், ஊழல், பெண்கள் மீதான அட்டூழியங்கள், கொலை, குண்டுவெடிப்புகள், ஹிந்துக்களை தவறாக நடத்துவதற்கான மையமாக மம்தா பானர்ஜி மாற்றியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள சர்வதேச எல்லைகளை வங்கதேசத்தினருக்கு அவர் திறந்து விட்டுள்ளார். அவரது ஆசியுடன் ஊடுருவல் நடக்கிறது. இதை பா.ஜ., அரசால் மட்டுமே தடுக்க முடியும்.
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதால், ஊடுருவலை தடுக்க எல்லை பாதுகாப்பு படைக்கு இடத்தை வழங்க மம்தா பானர்ஜி மறுக்கிறார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் அம்மாநிலத்தின் எதிர் காலம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பையும் தீர்மானிக்கும்.
மலிவான அரசியல்
தன் ஓட்டு வங்கிக்காக, அனைத்து தாழ்ந்த நிலைப்பாடுகளையும் மம்தா பானர்ஜி தாண்டி விட்டார். பாக்., பயங்கரவாதிகளின் மரணத்தால் அவர் வேதனை அடைந்தார். மலிவான அரசியல் அறிக்கையை வெளியிட்டு, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை அவர் எதிர்த்தார்.
ராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்ல, நம் நாட்டு பெண்களின் உணர்வுகளையும் அவர் புறக்கணிக்கிறார். மேற்கு வங்கத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
திரிணமுல் காங்., அமைச்சர்களின் வீடுகளில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அவர்களின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதில் இயந்திரங்களே சோர்ந்து போய் விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
வகுப்புவாத மனநிலை!
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். அப்படியிருக்கையில், பாக்., பயங்கரவாதத்தை உலகுக்கு அம்பலப்படுத்தும் வெளிநாட்டு எம்.பி.,க்கள் குழுவில், திரிணமுல் எம்.பி., அபிஷேக் பானர்ஜி எப்படி இடம் பெற்றார்? அமித் ஷாவின் பேச்சு, இழிவான வகுப்புவாத மனநிலையை காட்டுகிறது. முர்ஷிதாபாதில் அரசு ஆதரவோடு கலவரம் நடந்ததாக அவர் கூறுகிறார். 2002ல், குஜராத்தில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மேற்கு வங்கத்தில் ஊசலாடும் பா.ஜ.,வை, அமித் ஷாவே அழித்து விடுவார்.
-சாகேத் கோகலே
ராஜ்யசபா எம்.பி., - திரிணமுல் காங்.,