அமித் ஷா இன்று மைசூரு வருகை பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்
அமித் ஷா இன்று மைசூரு வருகை பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்
ADDED : பிப் 10, 2024 06:28 AM

மைசூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மைசூரு வருவது, பா.ஜ., தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில், கர்நாடகாவில் பா.ஜ.,வினர் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக, கிராமங்கள் தோறும் சென்று மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் பணியை துவங்கிவிட்டனர்.
'மீண்டும் மோடி - 2024' என்ற சுவர் ஓவியம் வரையும் பிரசாரமும் துவங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஓவியம் வரைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இன்று மைசூரு வருகிறார். புதுடில்லியில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், இன்று இரவு 10:50 மணிக்கு மைசூரு மன்டகள்ளி விமான நிலையத்துக்கு வருகை தருகிறார்.
இரவில் நகரின் தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். மறுநாள் காலை 11:00 மணிக்கு, சாமுண்டி மலைக்கு சென்று, பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்கிறார்.
அங்கிருந்து, நண்பகல் 12:00 மணிக்கு சுத்துார் மடத்துக்கு சென்று, சுத்துார் திருவிழாவில் பங்கேற்கிறார். மதியம் 2:35 மணிக்கு, தனியார் நட்சத்திர ஹோட்டலில், லோக்சபா தேர்தல் தொடர்பாக பா.ஜ., பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
பின், மாநிலத்தின் மூத்த தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்துகிறார். அதன் பின், மாலை 4:55 மணிக்கு, சிறப்பு விமானம் மூலம் மைசூரில் இருந்து புறப்படுகிறார்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அமித் ஷா வருவது, பா.ஜ., தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.