பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகை: கர்நாடகாவுக்கு அனுப்பியது மத்திய அரசு
பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகை: கர்நாடகாவுக்கு அனுப்பியது மத்திய அரசு
ADDED : மே 28, 2024 07:25 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. நாட்டில், புலிகள் பாதுகாப்பு திட்டம் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, 2023 ஏப்ரல் 9, 10, 11ல் மைசூரில் பொன் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பொன்விழா காணும் புலிகள் சரணாலயங்களில் ஒன்றான, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில், 'ஜங்கிள் சபாரி' சென்றார். பின், மைசூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
விழாவுக்கான மொத்த செலவையும் ஏற்பதாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறியிருந்தது. ஆரம்பத்தில், 3 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டது. இந்த பணத்தை, விழா முடிந்ததும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால், மொத்தம் 6.34 கோடி ரூபாய் செலவாகி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன், மீண்டும் 1 கோடி ரூபாய் வழங்கியது.
பாக்கி பணத்தை வழங்கும்படி மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் பலன் இல்லை. இதற்கிடையில், பிரதமர் மோடி, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தங்கிய மைசூரு நட்சத்திர ஹோட்டலின் பில், 80 லட்சம் ரூபாயும் செலுத்தப்படவில்லை. ஹோட்டலை முன்பதிவு செய்தது, மாநில வனத்துறை அதிகாரிகள் என்பதால், பணம் செலுத்துங்கள் என்று ஹோட்டல் நிர்வாகம் சமீபத்தில் கடிதம் அனுப்பியது.
தேர்தல் நடத்தை விதி
அதில், '80 லட்சம் ரூபாய் பில் தொகைக்கு, ஓராண்டு 18 சதவீதம் வட்டி சேர்த்து, 94.40 லட்சம் ரூபாய் செலுத்தும்படி குறிப்பிட்டிருந்தது. ஜூன் 1ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த பணத்தை கேட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு, மாநில அரசு கடிதம் அனுப்பியது.
ஆனால், 'கர்நாடகாவில் நிகழ்ச்சி நடந்ததால், மாநில அரசு தான் செலுத்த வேண்டும்' என்று ஆணையம் நழுவியது. இந்த தகவல்கள் வெளியாகி, மூன்று நாட்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஹோட்டலுக்கு பணத்தை செலுத்துகிறோம் என்று இறங்கி வந்தன.
இது குறித்து, மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, பெங்களூரில் நேற்று கூறியதாவது: ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய நபர்கள் வரும்போது, அவர்களின் விருந்தோம்பலை கவனிக்க வேண்டியது, மாநில அரசின் கடமை. ஆனால், கடந்தாண்டு ஏப்ரலில் புலிகள் திட்டத்தின் பொன்விழா நடந்த போது, கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
பாதுகாப்பு ஆணையம்
எனவே, அதில் மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், மைசூரு தனியார் ஹோட்டலுக்கு, மாநில அரசே பாக்கி பில் தொகை 80 லட்சம் ரூபாய் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், பொன்விழா செலவில் பாக்கி உள்ள 2.34 கோடி ரூபாயை, பண்டிப்பூர் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நேற்று அனுப்பியது. 'இந்த பணத்தில் இருந்து, பிரதமர் தங்கிய ஹோட்டல் பில் தொகையும் ஓரிரு நாளில் செலுத்தப்படும்' என மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.