அய்யய்யோ, ஆள விடுங்க சாமி; அலறுகிறது அமுல் நிறுவனம்!
அய்யய்யோ, ஆள விடுங்க சாமி; அலறுகிறது அமுல் நிறுவனம்!
ADDED : செப் 21, 2024 10:34 AM

புதுடில்லி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் உறுதி செய்துள்ளது. இதற்கு மத்தியில், திருப்பதிக்கு நாங்க ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை எனக் கூறி அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமுல் நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற எங்களின் அதிநவீன உற்பத்தி நிலையங்களில் அமுல் நெய் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அமுல் நெய் உயர்தர தூய பால் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
எங்கள் பால் பண்ணைகளில் பெறப்படும் பால் கடுமையான முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. FSSAI வழிகாட்டுதல்படி கலப்படம் கண்டறிதல் உட்பட கடுமையான தர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
முந்தைய ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பிற தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதை அடுத்து நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் அமுல் நிறுவனம் இந்த விளக்கம் அளித்துள்ளது.