UPDATED : நவ 05, 2024 03:39 AM
ADDED : நவ 05, 2024 12:59 AM

ஆக்ரா: உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே விமானப் படைக்கு சொந்தமான மிக் - 29 ரக போர் விமானம் விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவை நோக்கி பயிற்சிக்காக மிக் - 29 ரக போர் விமானம் நேற்று சென்றது. இதில், விமானிகள் இருவர் இருந்தனர். ஆக்ரா அருகே சென்றபோது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்த விமானிகள், யாருக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் விமானத்தை தரையிறக்க முயன்றனர்.
அது பலனளிக்காத நிலையில், காகேரோலில் உள்ள சோங்கா கிராமம் அருகே விமானம் சென்றபோது, பாராசூட் உதவியுடன் இருவரும் விமானத்தில் இருந்து குதித்தனர்.
இதையடுத்து விமானம் பலத்த சத்தத்துடன் அங்கிருந்த வயலில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்தும் எரிந்தது.
அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தை உறுதி செய்த ராணுவ அமைச்சகம், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ,, தொலைவில் விமானிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

