கன்னடம் கற்பிக்கும் ஆட்டோக்காரர் படித்தவர்களுக்கு பாடம் எடுக்கும் 'படிக்காதவன்'
கன்னடம் கற்பிக்கும் ஆட்டோக்காரர் படித்தவர்களுக்கு பாடம் எடுக்கும் 'படிக்காதவன்'
ADDED : டிச 07, 2024 11:08 PM

கற்றுக்கொள்ள வயது தடையில்லை, கற்பிப்பதற்கு பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஒரு ஆட்டோக்காரர். ஏழாம் வகுப்பு படித்த இவர், ஒரு நாளைக்கு 70 பேருக்கு கன்னடம் சொல்லித் தருகிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும், அப்படிப்பட்ட ஒருவரின் கதை தான், இந்த கட்டுரை.
பெங்களூரு நகரில் பல்வேறு மொழி பேசும் மக்கள் உள்ளனர். வெளியூரில் இருந்து இங்கு வருவோருக்கு கன்னடம் தெரியாது. இத்தகையோர் ஆட்டோ ஸ்டாண்ட், பஸ் நிலையம், உணவகம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பல இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு ஆட்டோக்காரர் எடுத்த முயற்சியால், பெங்களூரு முழுதும் பிரபலம் அடைந்தார். அவர் யார்; அப்படி என்ன செய்தார் என யோசிக்கலாம். அவர் வேறு யாரும் இல்லை; 'ஆட்டோ கன்னடிகா' என அழைக்கப்படும் அஜ்மல் சுல்தான், 31.
இவர், வட கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்; ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். ஏழாம் வகுப்பு படித்தபோது, குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் நிறுத்தினார். சிறுவயதிலேயே, ஆட்டோ ஓட்டுவதில் ஆர்வமாக இருந்தார். இந்த ஆர்வமே, அவரது தொழிலாக மாறிவிட்டது.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருக்கு தன் தாயுடன் வந்தார். இவருக்கு தந்தை இல்லை. எலஹங்கா, ஜக்கூர் பகுதியில் வீடு எடுத்துத் தங்கினார். பெங்களூருக்கு வந்த புதிதில், அவரிடம் மொபைல் போன் கூட இல்லை. இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டு வாடகை ஆட்டோ ஓட்டினார். செலவு போக, கையில் சொற்ப ரூபாயே மிஞ்சும்.
கடின உழைப்பு
இதை வைத்து குடும்பம் நடத்த முடியாமல் தவித்துள்ளார். எப்படியாவது ஒரு சொந்த ஆட்டோ வாங்க வேண்டும் என நினைத்தார். இதற்காக, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு சம்பாதித்தார். சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, சொந்தமாக காஸ் ஆட்டோ வாங்கினார். திருமணம் செய்தார்; மகன் பிறந்தான்.
இந்த வேளையில், தன்னால் நான்கு பேருக்கு நல்லது நடக்க வேண்டும் என கருதினார். தன் ஆட்டோவில் பயணம் செய்யும் கன்னடம் தெரியாத பயணியருக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்க துவங்கினார். இதற்காக அடிப்படை கன்னட வாக்கியங்களை, பிரின்ட் அவுட் எடுத்து, லேமினேஷன் செய்து ஆட்டோவில் வைத்தார். கன்னடம் தெரியாதோர், ஆர்வமுடன் படித்து வந்தனர். இதன் மூலம், அவர் பிரபலம் அடைந்தார்.
பிரபலம்
இவரது முயற்சியை பலரும் பாராட்டினர். சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நாட்கள் செல்ல, செல்ல அஜ்மல் சுல்தான், கர்நாடகா முழுதும் பிரபலம் ஆனார். இன்ஸ்டாகிராமிலும் அடிப்படை கன்னடம் கற்றுக் கொடுக்கிறார். 20,000 மேற்பட்ட அடிப்படை கன்னட வாக்கியங்களை பிரின்ட் அவுட் எடுத்து, பல ஆட்டோ ஓட்டுஞர்கள் உதவியுடன், அவர்கள் ஆட்டோக்களிலும் வைத்தார்.
இவர், நம் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஆரம்ப காலத்தில், என்னிடம் மொபைல் போன் இல்லை, ஆனால், இன்று பலரது மொபைலில் என் வீடியோக்களை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆட்டோவில், பயணியர் 10 முதல் 15 நிமிடங்கள் பயணம் செய்வர்.
அந்த சமயத்தில் கன்னடம் தெரியாதோர், அடிப்படை கன்னட வார்த்தைகளை கற்றுக் கொண்டு, என்னிடம் உரையாடுவர். அதை கேட்கும் போது, எனக்கு சந்தோஷமாக இருக்கும்.
கனவு
முதலில் வாடகை ஆட்டோ ஓட்டினேன். கடின உழைப்பால், சொந்தமாக இரண்டு ஆட்டோக்கள் வைத்துள்ளேன். என் ஆட்டோவில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி உள்ளேன். இதனால், தங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது பெண் பயணியர், பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரு நகரில், சொந்தமாக ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும். நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக்கூடாது; அவரை நன்றாக படிக்க வைப்பேன்.
யாரோ செய்யும் தவறுகளால், ஆட்டோக்காரர்கள் என்றாலே பலரும் ஏளனமாக பார்க்கின்றனர். என்னை பொறுத்தவரை யாராக இருந்தாலும், மரியாதை கொடுத்தால் தான், அவர்களுக்கு திருப்பி மரியாதை கொடுப்பேன். யாரிடமும் கையேந்தாமால், சுயமரியாதையுடன் இறுதி வரை வாழ்வதே என் லட்சயம்.
ஆட்டோக்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பயணிக்கின்றனர். பெண்களின் மாதவிடாய் நேரத்தில், பயணத்தின் போது, பிரச்னைகள் ஏற்படுகிறது. இத்தகைய பெண்களுக்கு இலவசமாக 'சானிட்டரி நாப்கின்' வழங்குவது தொடர்பாக, என்.ஜி.ஓ., அமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -