கால்நடைகளை 'பீட்டா'விடம் ஒப்படைத்தோருக்கு மின் ரிக்ஷா
கால்நடைகளை 'பீட்டா'விடம் ஒப்படைத்தோருக்கு மின் ரிக்ஷா
ADDED : மார் 20, 2024 11:48 PM
புதுடில்லி:'வாழ்வாதாரத்துக்காக நம்பியிருந்த குடும்பங்களில் இருந்து 150 பசு, காளை மற்றும் குதிரை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு மின்சர ரிக்ஷா வழங்கப்பட்டுள்ளது' என, பீட்டா அமைப்பு தெரிவித்து உள்ளது.
விலங்குகளின் நலனுக்காக செயல்படும் சர்வதேச அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பான பீட்டாவின் இயக்குனர் பூர்வா ஜோஷிபுரா கூறியதாவது:
மாடு மற்றும் குதிரைகளை வண்டியில் பூட்டப்பட்டு உழைக்க வைக்கப்படுகின்றன. அந்த விலங்குகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேநேரத்தில், அவற்றையே குடும்ப வாழ்வாதாரமாக நம்பியுள்ள அதன் உரிமையாளர்களையும் பரிசீலனை செய்தோம்.
பீட்டா அமைப்பு 2018ம் ஆண்டு முதல் டில்லி முழுதும் பசு, காளை மற்றும் குதிரை உட்பட 150 கால்நடைகளை மீட்டுள்ளது. அந்தக் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மின்சார ரிக்ஷா வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கால்நடைகள் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தன் குதிரையை ஒப்படைத்த ராம் பிரசாத், “ மின்சார ரிக்ஷா வாயிலாக எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. என் குடும்பத்தைக் காப்பாற்ற இதற்கு முன் குதிரையை நம்பி இருந்தேன்,”என்றார்.
அதேபோல, காளிசரண் என்பவர், “என் குடும்ப பிழைப்புக்காக மாட்டு வண்டி ஓட்டினேன்.
கடந்த ஆண்டு மாட்டை ஒப்படைத்த பிறகு, மின்சார ரிக்ஷாவில் நல்ல வருமானம் கிடைக்கிறது,”என்றார்.

