டில்லியை உலுக்கிய நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பீதி
டில்லியை உலுக்கிய நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பீதி
ADDED : பிப் 18, 2025 03:03 AM
புதுடில்லி : டில்லியில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
டில்லியில் நேற்று அதிகாலை 5:36 மணிக்கு, திடீரென கட்டடங்கள் குலுங்கின. உயரமான கட்டடங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருந்தது. வீடுகளிலும் அதிர்வு ஏற்பட்டதால், துாங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து, வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
4 ரிக்டர்
டில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் உயரமான கட்டடங்கள் குலுங்கின.
தேசிய தலைநகர் பிராந்தியம் என அழைக்கப்படும் டில்லியைச் சுற்றியுள்ள ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களின் சில மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீஹாரின் சில பகுதிகளிலும் நேற்று காலை 8:00 மணி அளவில் நில அதிர்வு இருந்தது.
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'டில்லி தவுலாகான் பகுதியில் உள்ள ஜீல் பூங்காவை மையமாகக் கொண்டு, 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
'பூமிக்கு கீழே 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலைமையை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன் இப்படி கட்டடங்கள் குலுங்கியதை பார்த்ததில்லை என, நொய்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

