/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'மகனுக்கு பெண் பார்த்து கொடுங்க' போலீசாரிடம் மன்றாடிய மூதாட்டி
/
'மகனுக்கு பெண் பார்த்து கொடுங்க' போலீசாரிடம் மன்றாடிய மூதாட்டி
'மகனுக்கு பெண் பார்த்து கொடுங்க' போலீசாரிடம் மன்றாடிய மூதாட்டி
'மகனுக்கு பெண் பார்த்து கொடுங்க' போலீசாரிடம் மன்றாடிய மூதாட்டி
ADDED : அக் 11, 2025 06:40 AM

துமகூரு: மூத்த குடிமக்களை சந்தித்து, பிரச்னை ஏதேனும் உள்ளதா என விசாரிக்க வந்த போலீசாரிடம், 'என் மகனுக்கு திருமணம் செய்ய பெண்ணே கிடைக்கவில்லை. பெண் பார்த்துத் தாருங்கள்' என, மூதாட்டி ஒருவர் மன்றாடினார். இதனால் போலீசார் 'ஷாக்' ஆகினர்.
கர்நாடகாவில் குற்றங்களை குறைக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரச்னைகள் இருந்தாலும், போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க பலருக்கும் தயக்கமாக இருக்கும்.
அதிலும் மூத்த குடிமக்களுக்கு நேரில் சென்று புகார் அளிப்பது கஷ்டம். இதை கருத்தில் கொண்டு, 'வீடு வீடாக போலீஸ்' திட்டத்தை கடந்த ஜூலை 18ம் தேதி, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துவக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின்படி, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று, 'மக்களிடம் ஏதாவது பிரச்னை உள்ளதா?' என போலீசார் விசாரிக்க வேண்டும். ஒருவேளை பிரச்னைகள் இருந்தால், புகார் பெற்று தீர்த்து வைப்பதே, திட்டத்தின் நோக்கம்.
துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகாவின், படவனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டுக்கு, நேற்று காலை போலீசார் சென்றனர். 'அக்கம், பக்கத்தினரால் பிரச்னை உள்ளதா, தெரு விளக்கு எரிகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா?' என, விசாரித்தனர்.
அப்போது மூதாட்டி, 'எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் பிரச்னையை தீர்ப்பதாக இருந்தால், என் மகனுக்கு ஒரு பெண் பார்த்துத் தாருங்கள். அது போதும். பல இடங்களில் தேடியும் பெண் கிடைக்கவில்லை' என, மன்றாடினார்.
மூதாட்டியின் கோரிக்கையை கேட்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குற்றமோ, சிவில் பிரச்னையோ இருக்கிறதா என்று கேட்க வந்தால், தனிப்பட்ட பிரச்னையை கூறிய மூதாட்டிக்கு, என்ன பதில் கூறுவது என்பது தெரியாமல் போலீசார் கையை பிசைந்தனர்.
அதன்பின், 'எங்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் கூறி, உங்கள் விஷயத்தில், ஏதாவது செய்ய முடியுமா என பார்க்கிறோம்' என கூறிவிட்டு, போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர்.