அனந்த் அம்பானியின் நெகிழ்ச்சி பேச்சு: கண்கலங்கிய முகேஷ் அம்பானி
அனந்த் அம்பானியின் நெகிழ்ச்சி பேச்சு: கண்கலங்கிய முகேஷ் அம்பானி
UPDATED : மார் 02, 2024 07:32 PM
ADDED : மார் 02, 2024 06:04 PM

ஜாம் நகர்: குஜராத் ஜாம் நகரில் நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாடட்டத்தின் போது, மகன் அனந்த் அம்பானியின் பேச்சைக் கேட்டு, தந்தை முகேஷ் அம்பானி கண்கலங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் வெகு விமர்சையாக நடக்க உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 முதல் மார்ச் 3வரை நடக்கிறது. அதில் கலந்து கொள்ள பல்வேறு பிரபலங்கள் ஜாம் நகர் வந்துள்ளனர்.
இந்நிகழ்வில் அனந்த் அம்பானி பேசும் போது, எனக்காக எனது குடும்பம் பல விஷயங்களைச் செய்துள்ளார்கள். என் வாழ்க்கை முழுக்க ரோஜா மலர்களாக இருந்தது இல்லை. முட்களின் வலியை நானும் அனுபவித்து இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே பல உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து உள்ளேன். ஆனால், என் அப்பாவும், அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிட்டது இல்லை. நான் கஷ்டப்படும் போது எல்லாம் என்னுடன் இருந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதனைக் கேட்ட அவரது தந்தை முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டார். இது குறித்த புகைப்படம் , வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

