பம்பையில் 40 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் இறக்கிய பைலட் ஐயப்பனை வணங்கி ஆனந்தம்
பம்பையில் 40 ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டர் இறக்கிய பைலட் ஐயப்பனை வணங்கி ஆனந்தம்
ADDED : டிச 19, 2024 12:46 AM
சபரிமலை:40 ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் இல்லாமல் பம்பையில் தரையிறக்கிய ஹெலிகாப்டரின் பைலட் டி.பி. சிங் அவுஜலா இருமுடியுடன் வந்து ஐயப்பனை வழிபட்டார்.
1985 மே 18ல் கொச்சி கடற்படையின் கடல் தேடுதல் விமானம் மாயமானது. அதை தேடுவதற்காக நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டரின் பைலட்டாக இருந்தவர் டி.பி. சிங் அவுஜலா. தேக்கடியில் துவங்கி காட்டுப் பகுதியில் பகல் முழுவதும் தேடி ஹெலிகாப்டர் பறந்தது. அப்போதுதான் எரிபொருள் குறைந்ததை பைலட் கவனித்தார்.காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்க இடம் தேடிய போது மலைகளுக்கு இடையே சிறு மைதானம் தெரிந்தது. அதில் ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கினார்.
அது பம்பை பஸ் ஸ்டாண்ட். பஞ்சாப் அரசின் தலைமை பைலட்டாக இருந்து ஓய்வு பெற்ற அவர் சண்டிகரில் வசித்து வருகிறார்.
தற்போது இருமுடி கட்டி வந்து மனைவியுடன் ஐயப்பனை தரிசித்த அவர் கூறியது: அன்று பம்பை பஸ் ஸ்டாண்டில் ஒரு கட்டடம் மட்டுமே இருந்தது. சீசன் இல்லாததால் யாரும் அங்கு இல்லை. இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தேன். என்னை காப்பாற்றியது ஐயப்பன் என நம்பினேன். அன்று நான் வேண்டிக்கொண்டபடி இப்போது வந்துள்ளேன்.
பம்பை இன்று மிகவும் மாறிவிட்டது என்றார். அவருடன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ நாகேஷ் டி நாயரும் வந்திருந்தார்.
சபரிமலையில் இருந்து கொச்சி திரும்பிய அவர் அங்கு கடற்படையின் வைர விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

