இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ADDED : ஜன 17, 2025 02:07 AM

திருப்பதி, “இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்; இது மக்கள்தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும்,” என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்கு, இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டம், 30 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்தது.
ஆந்திர அரசு, இந்த பழமையான சட்டத்தை சில மாதங்களுக்கு முன் நீக்கியது.
ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சமீபத்தில் கவலை தெரிவித்த சந்திரபாபு நாயுடு, அதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
இந்த சூழலில், மஹா சங்கராந்தி பண்டிகையை கொண்டாட, தன் சொந்த ஊரான திருப்பதியை அடுத்த நரவாரிப்பள்ளி கிராமத்துக்கு அவர் சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஒரு காலத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர்கள் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. அதனால், தற்போது கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியமானதல்ல
அதாவது, குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே, ஒருவர் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என சட்டம் கொண்டு வந்தால், மக்கள் தொகை குறைவதை கட்டுப்படுத்த முடியும்.
யார் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கின்றனரோ, அவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறேன்.
'இரட்டை வருமானம் - குழந்தை வேண்டாம்' என்ற கொள்கையை நவீன உலக தம்பதியர் கடைப்பிடித்து வருகின்றனர்; இது ஆரோக்கியமானதல்ல.
உங்கள் பெற்றோர்கள் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
அதை நீங்கள் வேண்டாம் என சொல்கிறீர்கள்; ஒரு சிலர், ஒரு குழந்தை போதும் என கூறுகின்றனர்.
இதேபோல் உங்களது பெற்றோர் நினைத்து இருந்தால், இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கவே முடியாது.
சிக்கல்
தற்போது, நிலைமை நம் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, நாம் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை இன்னும் உணரவில்லை.
வருமானத்தை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திய அந்நாட்டினர், தற்போது சிக்கலில் உள்ளனர்.
இங்கு இருக்கும் மனித வளத்தை அவர்கள் பயன்படுத்த நினைக்கின்றனர். நம் மாநிலத்தில், 2047க்கு பின் வயதானவர்களே அதிகம் இருப்பர்.
ஒரு பெண், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளை பெற்றால் மக்கள் தொகை குறையும். இரண்டுக்கு மேல் பெற்றால் அது அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.