ADDED : ஜூன் 01, 2025 02:23 AM

ஆட்சியிலும், கட்சியிலும், தன் மகனை அடுத்த வாரிசாக முடிசூட்டுவதற்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தயாராகிவிட்டார். இதையே, கட்சியின் மூன்று நாள் மாநாடு உணர்த்துகிறது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரே மகனான நாரா லோகேஷ், 42, தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், கட்சியின் தேசிய பொதுச்செயலராகவும் உள்ளார்.
முழு அதிகாரம்
கட்சி மற்றும் ஆட்சியில் ஏற்கனவே அவருக்கு தனி மரியாதை உள்ளது. அடுத்த வாரிசு அவர்தான் என்பது பரவலாக கட்சிக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சட்டசபைக்கு இந்தாண்டு நடந்த தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும், தன் மகன் நாரா லோகேஷுக்கு அமைச்சர் பதவியை சந்திரபாபு கொடுத்தார்.
அதுபோல, அதிகாரிகள் நியமனத்திலும் அவருக்கு முழு அதிகாரம் கொடுத்தார். கட்சியிலும் இது தொடர்ந்தது.
இதையடுத்து, நாரா லோகேஷை, துணை முதல்வராக்க வேண்டும், கட்சியின் செயல் தலைவராக்க வேண்டும் என, கட்சியில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் துவக்கிய தெலுங்கு தேசம் கட்சி தற்போது 43 வயதை நிறைவு செய்துள்ளது. தன் மாமனாரிடம் இருந்து, கட்சியின் அதிகாரத்தை சந்திரபாபு எடுத்துக் கொண்டார்.
கட்சியின் அடுத்த தலைவராக இந்த குடும்பத்தைச் சேர்ந்த நாரா லோகேஷ் இருப்பார் என்பது, கடப்பாவில் மூன்று நாட்கள் நடந்த கட்சியின் ஆண்டு மாநாட்டில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேடையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளும், நாரா லோகேஷை மையப்படுத்தியே பேசினார்.
அடுத்த, 40 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் குறித்தும், பா.ஜ., மற்றும் ஜனசேனா உடனான கூட்டணி குறித்தும் நாரா லோகேஷ் பேசினார்.
அண்டை மாநிலமான தெலுங்கானாவில், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதியில், அடுத்த வாரிசு தொடர்பாக அவருடைய மகன் மற்றும் மகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு இல்லை
அதுபோன்ற பிரச்னை சந்திரபாபு நாயுடுவுக்கு இல்லை. அதனால், 2029 சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, தன் மகனை கட்சியிலும், ஆட்சியிலும் அடுத்த வாரிசாக முடிசூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை. கட்சியிலும் எந்த எதிர்ப்பும் இல்லை.
இதை கட்சியின் கடப்பா மாநாடும் உறுதி செய்துள்ளது. அதனால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் நாரா லோகேஷுக்கு இருக்காது என, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
- நமது சிறப்பு நிருபர் -