5 நாளில் 150 கி.மீ., துாரம் நீந்தி ஆந்திர பெண் சாதனை!
5 நாளில் 150 கி.மீ., துாரம் நீந்தி ஆந்திர பெண் சாதனை!
ADDED : ஜன 04, 2025 08:00 PM

ஐதராபாத்: ஆந்திராவை சேர்ந்த 52 வயதான பெண்,  150 கி.மீ., துாரம் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள சமரிகோட்டா கிராமத்தில் வசித்து வருபவர் கோலி ஷியாமளா, 52, இவர், விசாகப்பட்டினத்திலிருந்து காக்கிநாடா வரை 150 கி.மீ. துாரம் நீந்தி பயணித்துள்ளார்.
இவர், இந்த சாதனையை 5 நாளில் செய்து முடித்துள்ளார். ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் துாரம் பயணம் என்ற கணக்கின் அடிப்படையில் 150 கி.மீ.,தொலைவு சென்றுள்ளார்.
ஷியாமளாவின் இந்த லட்சிய பயணத்தை, டிச.28 ஆம் தேதி துவக்கினார். இந்த நீச்சல் பயணத்தை, கோரமண்டல் ஒடிசி பெருங்கடல் நீச்சல் அமைப்பு கண்காணித்தது.
ஷியாமளாவுடன் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் உட்பட 14  உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழு, கடினமான நீச்சல் பயணத்தில் உடன் பயணித்து,அவரது பாதுகாப்பை உறுதிசெய்து, தேவையான உதவிகள் செய்தது.
ஷியாமளா தனது நீச்சல் பயணத்தை நிறைவு செய்தவுடன்,பெத்தபுரம் எம்.எல்.ஏ., சின்னராஜப்பா மற்றும் காக்கிநாடா நகராட்சி கமிஷனர் பாவனா வசிஷ்டா உள்ளிட்டோர் பாராட்டினர்.

