ஆன்மிகம் கன்னட எழுத்து பொறிக்கப்பட்டுள்ள ஆந்திரா கோவில்!
ஆன்மிகம் கன்னட எழுத்து பொறிக்கப்பட்டுள்ள ஆந்திரா கோவில்!
ADDED : நவ 12, 2024 06:05 AM

கர்நாடகா- - ஆந்திர மாநில எல்லையில், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் லெபக் ஷியில் உள்ளது வீரபத்ரா கோவில். இக்கோவில் சிவனின் உக்ர வடிவமான வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில், 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கட்டடக் கலை அம்சங்கள் விஜயநகர பாணியில் உள்ளது. கோவிலின் சுவர் ஓவியங்களில் ராமாயணம், மகாபாரதம், இதிகாச கதைகளை பிரதிபலிக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி சிலையும் உள்ளது. இக்கோவில் கர்நாடக எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால், பல கல்வெட்டுகளில் கன்னட எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பெனுகொண்டா மன்னர் அச்சுத தேவராயரின் ஆட்சியின் போது, விஜயநகர பேரரசின் கீழ் ஆளுநர்களாக இருந்த விருப்பண்ண நாயக், வீரண்ணா நாயக் சகோதரர்களால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
பிரதான கோவில், மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மண்டபம், நாட்டிய மண்டபம், ரங்க மண்டபம் என்று கோவில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துாண்களின் தெய்வீக மனிதர்கள், துறவிகள், இசைக் கலைஞர்கள், நடன கலைஞர்கள், சிவனின் 14 அவதாரங்கள், கருவறையின் நுழைவு வாயில் கங்கா மற்றும் யமுனை தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறையில், முழு ஆயுதம் ஏந்திய மற்றும் மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட வீரபத்ரரின் விக்ரகம் உள்ளது. கோவில் வளாகத்திற்குள் கிழக்கு பகுதியில் ஒரு பாறாங்கல்லில் சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதியின் உருவமும், மற்றொரு சன்னிதி அருகில் விஷ்ணுவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
...பாக்ஸ்...
* எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து லெபக் ஷி 123 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து நேரடி பஸ் சேவை உள்ளது. ரயிலில் செல்வோர் இந்துப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 13 கி.மீ., துாரத்தில் கோவிலை சென்றடையலாம். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
-- நமது நிருபர் - -***