ADDED : டிச 20, 2024 03:14 PM

அமராவதி: ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கும் வகையில் பார்சலில் சடலம் ஒன்றை மர்ம நபர்கள் அனுப்பி வைத்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகா துளசி. இவர், வீடு கட்டி வருகிறார். இதற்காக சத்ரியா சேவா சமீதி அமைப்பிடம் உதவி கேட்டார். இதற்காக அவர்கள் பார்சலில் டைல்ஸ் அனுப்பி வைத்தனர். பிறகு கட்டுமானத்திற்கு இன்னும் உதவித்தேவைப்படுவதாக அந்த அமைப்பிடம் கூறினார். இதனையடுத்து மின்சாதன பொருட்களை பார்சலில் அனுப்பி வைப்பதாக அந்த அமைப்பினர் கூறியிருந்தனர்.
நேற்று இரவு மர்ம நபர் ஒருவர், நாகா துளசியை தொடர்பு கொண்டு, மின்சாதன பொருட்களை பார்சலில் கொண்டு வீட்டுவாசலில் வைத்துள்ளதாக கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து நாகா துளசி மற்றும் குடும்பத்தினர் வந்து பார்சலை திறந்து பார்த்த போது, அதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்தது. அதில் மிரட்டல் கடிதம் ஒன்று கிடந்தது. அதில் ரூ.1.3 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால், மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்தது தெரியவந்துள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்சலை கொண்டு வந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் சத்ரியா சேவா சமீதி அமைப்பினரிடமும் விசாரணை நடத்துகின்றனர்.